குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) தேர்வில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி.
இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும்.
கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் தேர்வான மாணவர்களே, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில்தான் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். அந்த வகையில், அடுத்த வருடம்தான் முஸாதிகா பல்கலைக்கழகம் செல்ல முடியும். ஆனால், இவ்வருடம் தேர்வான மாணவர்கள் ஜூன் மாதத்தில்தான் பல்கலைக் கழகத்தில் சேர்க்க முடியும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சாபி நகர் எனும் கிராமத்தில் வசிக்கிறார் முஸாதிகா. அவரின் தந்தை மீராஸா – செங்கல் உற்பத்தி செய்யும் ஒரு தொழிலாளி. தாய் – உம்மு சல்மா.
முஸாதிகாவின் தந்தை மீராஸாவுக்கு 60 வயதாகிறது. தனது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாத அளவுக்கு மிகக் கடுமையான வறுமைக்கு மத்தியில்தான் அவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால், தனது பிள்ளைகள் பற்றிய அவரின் கனவு – மிகப் பெரிதாக இருக்கிறது.
அந்த மாணவியை கண்டு வாழ்த்துவதற்காக சாபி நகரிலுள்ள முஸாதிகாவின் வீட்டுக்கு, நிறையப் பேர் வந்து – போய்க் கொண்டிருந்தார்கள். முஸாதிகாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் அங்கு கூடியிருந்தார்கள்.
முஸாதிகாவின் தந்தை தனது கனவு மெய்ப்பட்ட மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார். “அரசு உத்தியோகத்தில் எனக்கு மிகவும் விருப்பம். எனது பிள்ளைகளில் ஒருவரை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்பது எனது பெருங்கனவாக இருந்தது. எனது ஒவ்வொரு பிள்ளையையும் மருத்துவராக்க வேண்டும் என்கிற ஆசையுடன்தான் படிக்க வைத்தேன். எனது மகள் மூலம் எனது கனவை இறைவன் நிறைவேற்றியுள்ளான்,” என்றார் முஸாதிகாவின் தந்தை.
முஸாதிகாவின் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். மூவர் ஆண்கள், இருவர் பெண்கள். ஆண் சகோதரர்கள் இருவருக்கும், சகோதரி ஒருவருக்கும் திருமணமாகி விட்டது. முஸாதிகா 2000ஆம் ஆண்டு பிறந்தவர்; கடைசிப் பிள்ளை.
முஸாதிகாவின் தந்தை செங்கல் உற்பத்தி செய்யும் ஒரு தொழிலாளி. வாழ்வாதரத்துக்கே போதாத வருமானம், அதற்கிடையில்தான் மகளை படிக்க வைத்து – இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
சாபி நகரில் 10-ஆம் வகுப்பு வரை படித்த பிறகு கல்விப் பொதுத் தராதரத்தில் உயர்தரம் கற்பதற்காக திருகோணமலையில் கல்லூரிக்கு சென்றுள்ளார் முஸாதிகா.
இரண்டு வருடங்களும் 08 மாதங்களையும் கொண்ட முஸாதிகாவின் உயர்தரப் படிப்பு – ஒரு தவம் போல் இருந்திருக்கிறது.
முஸாதிகாவின் தாயார் அவை குறித்துப் பேசினார். “உயர்தரம் படிக்க திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு மகளை அழைத்துச் சென்ற முதல் நாள், அங்கு உயர்தரம் படிப்பதற்காக வந்திருந்த ஏனைய பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர்களும் வந்திருந்தார்கள். எனது மகளுக்கு அப்படியொரு இடத்தில் படிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததைப் பார்க்க பெரும் சந்தோசமாக இருந்தது. ‘இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிய இறைவா, எனது பிள்ளையை வெறுங்கையுடன் அனுப்பி வைத்து விடாதே’ என்று, அந்த இடத்தில் பிரார்த்தித்தேன்,” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போது அழுது விட்டார்.
அப்போது முஸாதிகாவின் தந்தை பேசத் தொடங்கினார். “திருகோணமலையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்தோம். அங்குதான் மகள் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளுக்குச் சென்று வந்தார். அவருடன் தாயும் தங்கியிருந்து சமைத்துக் கொடுத்து உதவி புரிந்து வந்தார். வீட்டில் சமைக்க எவருமில்லாததால், மகளின் உயர்தரப் படிப்பு முடியும் வரை அநேகமாக ஹோட்டலில்தான் சாப்பிட்டு வந்தேன்.”
“எல்லா வகுப்புகளிலும் மகள் முதலாம் ஆளாகத்தான் வந்திருக்கிறார். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும் சிந்தியடைந்தார். பத்தாம் வகுப்பு சாதாரண தரப் பரீட்சையிலும் நல்ல பெறுபேறு கிடைத்தது. அதனால், அவர் உயர்தரப் பரீட்சையிலும் நல்ல பெறுபேற்றுடன் தேர்வாவார் என்கிற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருந்தது. பள்ளிவாசலில் என்னைச் சந்திப்பவர்கள்கூட எனது மகளுக்கு நல்ல பெறுபேறு கிடைக்க எனது முன்னிலையில் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். அது நிறைவேறியிருக்கிறது,” என்றார்.
முஸாதிகாவின் இந்த வெற்றிக்காக அவரின் குடும்பமே பாடுபட்டிருகிறது. “காலை 6 மணிக்கு செங்கல் வெட்ட சென்றால், இரவுதான் வீடு வருவேன். சாதாரணமாக நாளொன்றுக்கு 700 கற்கள் வெட்டுவேன். உதவிக்கு யாரையும் வைத்துக் கொள்வதில்லை. தனியாகத்தான் தொழிலைச் செய்கிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் மகளின் படிப்புக்காக செலவு செய்து வந்தேன். ஒருபோதும் அந்தச் செலவுகளை நான் எழுதியோ, கணக்கிலோ வைத்துக் கொள்வதில்லை. பெருந்தொகையான செலவை எழுதி வைத்து மொத்தமாகப் பார்த்தால், மகளின் படிப்புக்கான செலவுகள் எனக்குப் பாரமாகத் தெரிந்து விடுமோ என்று நினைத்தே, அவற்றினை நான் எழுதி வைத்துக் கொள்ளவில்லை. மகளின் வெற்றிதான் எனது குறிக்கோளாக இருந்தது,” என்று தொடர்ந்து பேசினார் முஸாதிகாவின் தந்தை.
இந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொண்ட முஸாதிகா மிகவும் அமைதியாக இருந்தார். அவருடன் பேசினோம். “வாப்பாவுக்கு அரச தொழில் என்றால் விருப்பம். நான் முதலாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே, டாக்டராக வேண்டும் என்று வாப்பா என்னிடம் சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கான ஆரம்பமாக இந்தப் பெறுபேறு கிடைத்திருக்கிறது. இந்த இடத்தில் எனது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் ஆசிரியர்கள் எல்லோருக்கும் எனது நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்” என்றார் முஸாதிகா.
முஸாதிகாவின் குடிசை வீடு அமைந்துள்ள காணியில், அவர்கள் கடந்த 13 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த இடம், வேறொருவருக்குச் சொந்தமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்தக் காணியை முஸாதிகாவின் தந்தை விலையாக வாங்கியிருக்கிறார்.
முஸாதிகாவின் தந்தை, அரச தொழிலில் எந்தளவுக்கு விருப்பமுடையவராக இருந்தார் என அவரின் சகோதரியின் மகள் சுஹைனா கூறுகிறார்.
“சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு அரச மருத்துவமனையில் ஒரு வேலை கிடைத்தது. அந்த வேலைக்கான நாட்சம்பளம் 500 ரூபாய். அந்த சம்பளம் எங்கள் குடும்பச் செலவுக்குப் போதாது. எனவே வீட்டு வறுமை காரணமாக, அப்போது வேலை தேடி வெளிநாடு செல்ல முடிவு செய்தேன். இதனைக் கேள்விப்பட்ட எனது மாமா (முஸாதிகாவின் தந்தை) எங்கள் வீட்டுக்கு வந்தார். எனக்குக் கிடைத்த அரச வேலைக்குச் செல்லுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நான் முடியாது என்று சொன்னபோது என்னை ஏசினார். கடைசியில் எனது 500 ரூபாய் நாட் சம்பளத்துடன் சேர்த்து, அவர் ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் தருவதாக எனக்கு வாக்குறுதியளித்து என்னை, அந்த அரச தொழிலுக்கு அனுப்பி வைத்தார். அவர் சொன்னபடியே எனக்கு 200 ரூபாய் தந்து கொண்டேயிருந்தார். பிறகு எனது தொழில் நிரந்தமானது. இப்போது நான் நல்ல சம்பளம் பெறுகிறேன்,” என்று நெகிழ்வுடன் கூறினார் சுஹைனா.
மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மீராஸாவின் கனவு, அவரின் மகள் முஸாதிகா மூலம் நிறைவேறியிருக்கிறது.
முஸாதிகா குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன, சமூக வலைத்தளங்களில் முஸாதிகாவின் இந்த அடைவினை பலரும் கொண்டாடி வருகின்றனர். படிப்பில் சாதிப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல என்று முஸாதிகாவின் பரீட்சை முடிவினை பலரும் உதாரணமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், முஸாதிகாவின் இந்த வெற்றிக் கதையில், அவரின் தந்தைதான் நமக்கு ‘ஹீரோ’வாக புகழப்படுகிறார்.
நன்றி: பிபிசி