புதுடெல்லி (16 ஜன 2022): உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூட்டு கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.
டெல்லி எல்லையில் போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், கூட்டு கிசான் மோர்ச்சா மற்றொரு போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் மற்றுமொரு போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் படுகொலை நடந்த லக்கிம்பூரிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி மீண்டும் போராட்டத்தைத் தொடங்க கூட்டு கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்.
மேலும் ஜனவரி 31ம் தேதி விவசாயிகளின் துரோக தினமாக அனுசரிக்கப்படும். என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும் அப்போது அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் கருதுகின்றனர். ஆதரவு விலை நிர்ணயம் செய்ய கமிட்டி கூட அமைக்கப்படவில்லை. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் ஜனவரி 31ம் தேதி துரோக தினமாக கடைபிடிக்கப்படுகிறது என விவசாயிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.