இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

Share this News:

மும்பை (10 பிப் 2020): முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமம் ஒன்றில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ள இஸ்லாக் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ள இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.

இந்த கிராமத்தில். கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுகுறித்த ஆவணத்தில் ஊராட்சித் தலைவர், ஊராட்சித் துணைத்தலைவர் ஆகியோர் கையொப்பம் இட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஊராட்சித் தலைவர் பாபாசாகேப் கோராங்கே செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு நிலம் ஏதும் இல்லை. அதேசமயம் அவர்களின் அடையாளம் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஆவணங்களும் கிடையாது.

ஆனால் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இந்த நிலத்தைசேர்ந்தவர்கள் தான் என்று நிரூபிக்க எந்தவித அடையாளமும் இல்லை. அதற்காக அவர்களை நாங்கள் தூக்கி எறிந்துவிட முடியுமா? எங்கள் கிராமத்தில் முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லை; இருப்பினும் மனிதநேயத்தின் அடிப்படையிலேயே இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றிஇருக்கிறோம்” எனத் தெர்வித்துள்ளார்.

நாட்டிலே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் கிராமம் இஸ்லாக் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply