புதுடெல்லி (19 ஜன 2020): டெல்லி ஷஹீன்பாக் குடியுரிமை எதிர்ப்பு போராட்டத்தை ஊடகங்கள் சில கொச்சைப்படுத்தியுள்ளன.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்தை நாட்டின் முக்கிய ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. சமூக வலைதளங்களில் மட்டுமே இவர்கள் ஹைலைட் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் இப்போராட்டக் காரர்கள் 500 ரூபாய்க்கு கூலிக்காக வந்தவர்கள் என்று பொய்யான பிரச்சாரத்தின் மூலம் கொச்சைப்படுத்த சில ஊடகங்கள் களமிறங்கியுள்ளன.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போராட்டக் காரர்கள், “நாங்கள் 500 ரூபாய்க்காக வரவில்லை 500 ஆண்டுகளைக் காப்பாற்ற வந்துள்ளோம். எங்கள் போராட்டத்தை அநியாயமாக கொச்சைப் படுத்தாதீர்கள்” என்று பதாகைகள் ஏந்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.