சென்னை (04 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமுமுக மூன்றாவது இடத்தை பிடித்து அதிமுகவுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வியாழன் வெளியானது. ஒன்றிய கவுன்சிலில் திமுக முதலிடத்திலும் அதிமுக இரண்டாவது இடத்தையும் பிடித்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் அமமுக 95 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக, திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளையே மலைக்க வைத்து வெற்றிபெற்றார். ஆனாலும், அதிமுகவை முதல்வர் பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரனின் அமமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் கனிசமான வாக்குகளை பெற்றது. அதன் பிறகு, நடைபெற்ற வேலூர் மக்களவைத் தேர்தலிலும், நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடாது என்று அறிவித்தார். இது டிடிவி தினகரனின் பின்வாங்கல் என்றும் அமமுகவுக்கு பின்னடைவு என்றும் கூறப்பட்டது. அதிமுகவினர் அமமுகவை காணாமல் போய்விடும் என்று கூறினர்.
இந்த நிலையில், தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில், திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்து அமமுக 95 இடங்களில் வெற்றி பெற்று மாநில அளவில் 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் 133 இடங்களை திமுக கூட்டணி கைபற்றவுள்ளது. 128 இடங்களை அதிமுக கூட்டணி தக்க வைத்துள்ளது. 1 இடத்தில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் இழுபறி நிலவிவருகிறது.
டிடிவி தினகரனும் அமமுகவும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் அமமுக சார்பில் போட்டியிட்டவர்களில் 95 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருப்பது அதிமுகவில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் தலைமையிலான அமமுகவின் இந்த வெற்றி அதிமுகவை மட்டுமல்லாமல் தமிழக அரசியல் கட்சிகளின் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது. குறிப்பிடும்படியான இந்த வெற்றி அமமுகவினர் இடையே புத்தெழுச்சியாக கருதப்படுகிறது.