சென்னை (19 ஜன 2020): சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.4,073 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவை கொஞ்சம் கூட எதிர்த்து பேசாமல் இருந்து வந்த அதிமுகவினர் தற்போது எதிர்க்க தொடங்கியுள்ளனர். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாஜகவின் நட்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.
குறிப்பாக உள்ளுரில் வாழும் அனைத்து மதங்களிலும் உள்ள அதிமுக தொண்டர்கள்தான் பாஜகவின் கூட்டணியால் தர்ம சங்கடத்தை உணர்கின்றனர்.
இதனை அதிமுகவின் முக்கிய அமைச்சர்களும் உணர தொடங்கியுள்ளனர். ஆனால் வாய் திறக்க அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில் பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்றும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது அதிமுக முகாமை கொந்தளிக்க வைத்துவிட்டது. இதன் வெளிபாடாகவே பொன்.ராதா என்ன விரக்தியில் இருக்கிறார் எனத் தெரியவில்லை என அவரை விமர்சித்து பேட்டி கொடுத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
இதனிடையே சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஏற்கனவே ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அதிமுக அதனை கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இப்போது அமைச்சர் ஜெயகுமார் வாய் திறந்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.4,073 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்