திமுகவுக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பு!எடப்பாடி அதிர்ச்சி..!!

Share this News:

சென்னை (25 ஆக 2020): திமுக மீது உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து, சட்டப்பேரவைக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக்கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உரிமைக்குழு நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது. அதேசமயம் இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘உரிமைக்குழு நடவடிக்கையில் பாரபட்சம் இல்லை. பேரவைத் தலைவரின் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சபைக்குள் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கொண்டு வந்துள்ளனர். இது, சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்துவதாகும். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக இரு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்தது உயர்நீதிமன்றம்.

வழக்கின் இறுதி விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய முதலாவது அமா்வில் நடந்தபோது, திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோா் இறந்துவிட்டதாலும், கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, எஞ்சிய 18 போ் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அமித் ஆனந்த் திவாரி, ஆா்.சண்முகசுந்தரம், என்.ஆா்.இளங்கோ ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

தமிழக அரசின் சட்டப் பேரவைச் செயலா் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞா் விஜய் நாராயண் மற்றும் சட்டப்பேரவை உரிமை மீறல் குழு சாா்பில் அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞா் ஏ.எல்.சோமையாஜி ஆகியோா் வாதிட்டனா்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தரப்பில் , “இந்த வழக்கில் திமுகவின் வாதத்தையே தனது வாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனா். இந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *