தோஹா, கத்தார் (19 மே, 2024): பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி-களின் சேவை, கத்தார் நாட்டில் விரைவில் துவங்க உள்ளது. அதன் முன்னோட்டமாக, அடுத்த ஆறு மாதங்களுள், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டாக்ஸிகள் பறக்கத் துவங்கும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நிகழும் சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பல்வேறு உத்திகளை நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது கத்தார்.
கத்தாரில் ஏற்கனவே பெட்ரோல் டீஸலில் இயங்கும் கனரக வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாட்டில் 75 சதவீத பேருந்துகள், சுற்றுச்சூழலுக்கு மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் பேட்டரியில் இயங்கி வருகின்றன. எதிர்வரும் 2030 க்குள் கத்தாரில் பெட்ரோல் டீஸல் இன்றி முழுக்க முழுக்க பேட்டரி மூலம் மட்டுமே அனைத்து கனரக வாகனங்களும் இயங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பேட்டரிகளுக்குத் தேவையான மின்சாரத்தை சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கிட பெரும் ஆலைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்வடிவத்திற்கு வந்துள்ளன.
இந்நிலையில், பறக்கும் டாக்ஸி-களுக்கான சோதனை ஓட்டங்களைத் தொடர, தொடர்புடைய அரசின் அனைத்து கிளைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த டாக்ஸிகள் பறக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இத்தகைய பல்வேறு கவர்ச்சியான திட்டங்களின் மூலம் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கவும், அதன் மூலம் கத்தார் நாட்டிற்கு வருமானத்தை ஈட்டவும் இயலும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)