எங்களை ஏன் அழைக்க வேண்டும்? – பிரதமர் மோடி மீது மம்தா காட்டம்!

Share this News:

கொல்கத்தா (20 மே 2021): பிரதமர் மோடி இன்று (20.05.2021) கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் கள அதிகாரிகளோடு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.

இந்தநிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லையென குற்றஞ்சாட்டிய மம்தா, இது ஒரு வழி தகவல் தொடர்பு அல்ல. ஒரு வழி அவமானம். ஒரு தேசம். அனைத்தும் அவமானம் என கூறியுள்ளார்.

முதல்வர்கள் சொல்வதைக் கேட்க விரும்பாத அளவுக்கு பிரதமர் தன்னம்பிக்கையற்றவரா? அவர் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? முதல்வர்கள் பேசுவதை கேக்க விரும்பவில்லையென்றால் ஏன் எங்களை அழைக்க வேண்டும். அவர் சில மாவட்ட மாஜிஸ்ட்ரெட்களை பேச அனுமதித்து, முதலமைச்சர்களை அவமதித்துவிட்டார் என தெரிவித்துள்ள மம்தா, தான் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், ஆனால் பிரதமர் படுக்கைகள், ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவைகளின் இருப்பு குறித்தோ, கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கருப்பு பூஞ்சை நிலை குறித்தோ எதுவும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் திமிர் பிடித்தவராக இருப்பதாக கூறிய மம்தா, “பல மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் (மத்திய அரசு) என்ன நினைக்கிறார்கள்?. நாங்கள் என அடிமை தொழிலாளர்களா இல்லை பொம்மைகளா?அவர்கள் கூட்டாட்சி கட்டமைப்பை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அனைத்து முதல்வர்களுக்காகவும் பேசவில்லை. ஆனால் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறுவதை போன்று சர்வாதிகாரம் நிலவுகிறது” என கூறியுள்ளார்.

மேலும் அவர், “எங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் நடந்தபோது, அவர்கள் மத்திய குழுக்களை அனுப்பினர். உத்தரபிரதேசத்திற்கு எத்தனை மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டன? உத்தரபிரதேச மாநிலத்தில் உடல்கள் நீரில் மிதக்கின்றன. நாம் நதியை சார்ந்த நாடு. அவர்கள் கங்கையை மாசுத்தப்படுத்தியதை மறைக்க, உத்தரபிரதேசத்தில் எதுவும் நடக்கவில்லை என கூறுகின்றனர். அவர்கள் கங்கை தாயை சிதைக்கிறார்கள். இயற்கை அவர்களை மன்னிக்காது” எனவும் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *