இதென்ன மாபெரும் குற்றமா? – கொந்தளித்த சீமான்!

Share this News:

சென்னை (12 ஜூன் 2021): திருச்சி கே.கே. நகரில் கார் உதிரி பாகன நிறுவனத்தில் புகுந்து, அதன் உரிமையாளரை மிரட்டியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்ற தேசியத் தலைவர் வே.பிரபாகரனைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல் துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல் துறை திடீரென கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

மாற்றுக் கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல் துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.

இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, 4 பேரையும் கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென, தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *