சசிகலா எச்சரிக்கை!

Share this News:

சென்னை (05 டிச 2021): அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும் ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்தது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைபடும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்று முதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது. எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில் அக்கறை காட்டும் போது தான் அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது ஒரு நல்ல எண்ணமும் நம்பிக்கையும் வரும் எந்த ஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவையே ஓழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.

அதிமுக தொண்டரான ராஜேஷ் இன்றைக்கு தலைமைக் கழகத்துலேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. இன்று, நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் அவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை சிரழித்துவிடாதீர்கள் இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது.

தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும் என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன். ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில் நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை உணர வேண்டும்.

இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *