ரியாத், சவூதி அரேபியா (17 செப் 2025): சவுதி அரேபியாவும் அணுசக்தி வலிமை கொண்ட பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை 17 செப் 2025 அன்று ரியாத்தில் நடந்த சந்திப்பின் போது, சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: (இந்நேரம்.காம்)
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கு எதிராக கூட்டுத் தடுப்பையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இரு சகோதர நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.
பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள், பொதுவான நலன்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் பற்றிய கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அரசுமுறை பயணமாக தற்போது சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.
“இந்த ஒப்பந்தம் பல வருட விவாதங்களின் முடிவாகும். இது குறிப்பிட்ட நாடுகளுக்கோ அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கோ பதில் அல்ல, ஆனால் நமது இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால மற்றும் ஆழமான ஒத்துழைப்பின் நிறுவனமயமாக்கல் ஆகும்” என்று சவூதியின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில், பாகிஸ்தானின் அணுசக்தி ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு “இது அனைத்து இராணுவ வழிமுறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான தற்காப்பு ஒப்பந்தமாகும்” என்றும் பதில் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 9, 2025 அன்று கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, உலகெங்கும் இஸ்ரேலின் மீது கண்டனங்கள் குவிந்தன. தொடர்ந்து, தோஹாவில் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) இடையே ஒரு அவசர கூட்டு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அமர்வுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, சவூதி மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதும், கடந்த 1967 முதல், பாகிஸ்தான் 8,200 க்கும் மேற்பட்ட சவுதி ஆயுதப்படை வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. (இந்நேரம்.காம்)