தோஹா, கத்தார் (29 செப் 2025): தோஹா மீது நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்காக, கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு. இனியொரு முறை இத்தகைய தாக்குதலை கத்தார் மீது ஒருபோதும் நடத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளார் நெதன்யாஹு.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் கடந்த செப்டம்பர் 09, 2025 அன்று கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள கத்தார், இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளானது. ஹமாஸை கத்தார் தொடர்ந்து ஆதரித்தால், தாக்குதல் மீண்டும் நிகழும் என எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்.
இந்நிலையில், பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தையும் ஹமாஸுக்கான தனது ஆதரவும் தொடரும் எனும் தனது நிலைபாட்டினை உறுதியாக அறிவித்தது கத்தார்.
கத்தார் மீதான் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக, உலக நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேல்மீது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன. (இந்நேரம்.காம்)
அதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனை தனிநாடாக அங்கீகரித்து உலகின் பெரும்பாலான நாடுகளால் இஸ்ரேல் தனிமைப் படுத்தப் பட்டது. இதனால் இஸ்ரேல் கடும் அழுத்தத்தில் உள்ளது.
நெதனுயாஹுவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததால், இஸ்ரேல் நாட்டு விமானங்கள் தமது வான் வழியைப் பயன்படுத்த பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால் இஸ்ரேலில் இருந்து வழக்கமாக அமெரிக்கா பயணிக்கும் வான் வழிப்பாதையை மாற்றிக் கொண்டு அமெரிக்கா சென்றடைந்தார் நெதன்யாஹு.
இந்நிலையில் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானியை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அழைப்பின் போது, தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்காகவும், கத்தாரின் இறையாண்மையின் மீதான தாக்குதலுக்காகவும் மன்னிப்புக் கோரியுள்ளார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு. அத்துடன், கத்தார் மீது இத்தகைய தாக்குதல் ஒருபோதும் மீண்டும் நிகழாது என்பதற்கான உத்தரவாதத்தினை அளித்தார் நெதன்யாஹு.
- இந்நேரம்.காம்

3 thoughts on “கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு!”