காஸா (30 செப் 2025): கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 20 அம்சத் திட்டம் ஒன்றினை அமெரிக்க வெள்ளை மாளிகை திங்களன்று 29 செப்டம்பர் 2025 வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனின் பகுதியான காஸா வாழ் மக்களின் சிறப்பான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டம் இயற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும்.
காஸா இனி ஹமாஸ் அரசின் கட்டுப்பாட்டில் இயங்காமல், பாலஸ்தீன மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தால் தற்காலிகமாக ஆளப்படும். இஸ்ரேல் காஸா-வை இணைத்துக் கொள்ளாது.
காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ட்ரம்பின் 20 அம்சத் திட்டம் பின் வருவதாவது:
- காஸா, பயங்கரவாதம் இல்லாத பாதுகாப்பாக மக்கள் வாழும் பகுதியாக இருக்கும். இது அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது.
- இதுநாள் வரை கடுமையான துன்பங்களை அனுபவித்த காஸா மக்களின் நலனுக்காக காஸா மீண்டும் கட்டியெழுப்பப்படும்.
- இந்த முன்மொழிவுக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும். இந்தக் காலகட்டத்தில், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் உள்ளிட்ட இஸ்ரேலின் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். பிணைக் கைதிகள் விடுவிக்கப் படுவதற்காக இஸ்ரேலியப் படைகள் ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குப் பின்னால் அகன்று சென்று விடும். மேலும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை போர் வரம்புக்கான எல்லைகள் முடக்கப்படும்.
- ஹமாஸின் பொறுப்பில் காஸா-வில் தற்போது உள்ள உயிருடன் எஞ்சி இருக்கும் மற்றும் இறந்த அனைத்து பிணையக் கைதிகளும் 72 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் வசம் திருப்பி ஒப்படைக்கப் பட வேண்டும்.
- அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டவுடன், 250 காஸா ஆயுள் தண்டனைக் கைதிகளையும், அத்துடன் அக்டோபர் 7, 2023 க்குப் பிறகு கைது செய்யப்பட்ட 1,700 காசா மக்களையும் (அச்சூழலில் கைது செய்யப்பட்ட அனைத்துப் பெண்களும் குழந்தைகளும் உட்பட) இஸ்ரேல் விடுவிக்கும். ஒவ்வொரு இஸ்ரேலியப் பிணைக் கைதிகளுக்கும் பகரமாக இறந்த 15 காசா மக்களின் உடல்களை இஸ்ரேல் விடுவிக்கும்.
- அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் திருப்பி அளிக்கப்பட்ட பின்பு, அமைதியான வாழ்க்கை வாழ உறுதியளித்து, தங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களைக் களைந்து சரண் அடைய சம்மதிக்கும் ஹமாஸ் உறுப்பினர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும். காஸா-வை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு, அவர்களை ஏற்கும் நாடுகளுக்கு சென்று சேரும்வரை பாதுகாப்பான பயண வசதி செய்து தரப்படும்.
- இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், முழுமையான உதவி உடனடியாக காஸாவிற்குள் அனுப்பப்படும். குறைந்தபட்சம், மனிதாபிமான உதவி தொடர்பான ஜனவரி 19, 2025 ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள உதவிப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் காஸாவின் உள்கட்டமைப்பு (தண்ணீர், மின்சாரம், கழிவுநீர்) சீரமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் அடுமனைகளின் சீரமைப்பு, மற்றும் இடிபாடுகளை அகற்றவும் சாலைகளைத் திறக்கவும் தேவையான மருத்துவ உபகரணங்களை அளித்தல் ஆகியவை அடங்கும்.
- காஸா பகுதிக்குள் உதவிப் பொருட்களின் விநியோகம் துவங்கும். ஐநா சபை மற்றும் அதன் முகவர் நிலையங்கள், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் மூலம் உதவிகள் தொடரும். காஸாவிற்குள் நுழையும் ரஃபா எல்லைக் கடவையை இரு திசைகளிலும் திறப்பது ஜனவரி 19, 2025 ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட அதே வழிமுறைக்கு உட்பட்டதாக இருக்கும். (இந்நேரம்.காம்)
- காஸா-வின் பொது மக்களுக்குப் பொதுச் சேவைகள் மற்றும் நகராட்சிகளின் அன்றாட நிர்வாகத்தை வழங்குவதற்குப் பொறுப்பான, ஒரு தொழில்நுட்ப, அரசியல் சார்பற்ற பாலஸ்தீனியக் குழுவின் தற்காலிக இடைக்கால ஆட்சியின் கீழ் காஸா ஆளப்படும். இக் குழுவில் தகுதி வாய்ந்த காஸா வாழ் பாலஸ்தீனியர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இருப்பார்கள். இக்குழு டிரம்ப் தலைமையில் செயல்படும் ஒரு புதிய சர்வதேச இடைக்கால அமைப்பான “அமைதி வாரியத்தின்” மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் இருக்கும். இதில் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உட்பட அறிவிக்கப்படவுள்ள பிற உறுப்பினர்கள் மற்றும் நாட்டுத் தலைவர்கள் இருப்பார்கள். பாலஸ்தீனிய அதிகாரசபை அதன் சீர்திருத்தத் திட்டத்தை (அதிபர் டிரம்பின் 2020 அமைதித் திட்டம் மற்றும் சவுதி-பிரெஞ்சு முன்மொழிவு உட்பட பல்வேறு திட்டங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது) நிறைவு செய்து, காசாவின் கட்டுப்பாட்டைப் பாதுகாப்பாகவும் திறம்படவும் திரும்பப் பெறும் வரை, இந்த அமைப்பு காசாவை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கான கட்டமைப்பை அமைத்து, புதிய அரசின் நிதியைக் கையாளும். காசா மக்களுக்குச் சேவை செய்யும் மற்றும் சர்வதேச முதலீட்டை ஈர்க்கும் வகையில், நவீன மற்றும் திறமையான நிர்வாகத்தை உருவாக்க இந்த அமைப்பு இயங்கும்.
- ட்ரம்பின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் மத்திய கிழக்கில் செழிப்பான நவீன அற்புத நகரங்களை உருவாக்க உதவிய நிபுணர்கள் குழுவைக் கூட்டி, காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும் புத்துயிர் அளிக்கவும் உருவாக்கப்படும். பல ஆழமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உற்சாகமான மேம்பாட்டு யோசனைகள் நல்லெண்ணம் கொண்ட சர்வதேச குழுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் காஸா வாழ் பாலஸ்தீனர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் எதிர்கால காஸா-க்கான நம்பிக்கையை உருவாக்கும் இந்த முதலீடுகளை ஈர்க்கவும் எளிதாக்கவும் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க அவை பரிசீலிக்கப்படும்.
- சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று காஸா-வில் நிறுவப்படும். அதில் பங்கேற்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விருப்பமான வரி மற்றும் அணுகல் கட்டணங்கள் இருக்கும்.
- காஸா-வை விட்டு யாரும் வெளியேற கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள். காஸா வாழ் மக்கள் வெளியேற விரும்பினால், சுதந்திரமாக வெளியேறவும், தேவைப்படும்போது காஸாவிற்கு திரும்ப வரவும் இயலும். காஸா வாழ் மக்கள் காஸாவிலேயே வாழ ஊக்குவிக்கப்படும். மேலும் காஸா-வாழ் மக்களே சிறந்த காசாவை கட்டமைக்க வாய்ப்புகள் வழங்கப்படும்.
- ஹமாஸ் மற்றும் பிற பிரிவுகள் காஸா-வின் ஆட்சியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலோ எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று ஒப்புக் கொண்டு கையெழுத்திட வேண்டும். காஸாவில் ஹமாஸ் அமைத்த சுரங்கங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி வசதிகள் உட்பட அனைத்து இராணுவ, பயங்கரவாத மற்றும் தாக்குதல் உள்கட்டமைப்புகளும் அழிக்கப்படும். அவை மீண்டும் கட்டப்படாது. நடுநிலையான கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் ஆயுதம் மற்றும் அபாயங்கள் ஏதுமற்ற காசா கட்டி எழுப்பப்படும் . இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டவாறு ஹமாஸின் ஆயுதங்களைக் களைவதற்கான செயல்முறை மூலம் ஆயுதங்களை நிரந்தரமாகப் பயன்படுத்த இயலாதவாறு அழிக்கப்படும். புதிய காஸா, ஒரு செழிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும், அதன் அண்டை நாடுகளுடன் அமைதியான சகவாழ்வுக்கும் முழுமையாக உறுதியளிக்கும்.
- புதிய காஸா-வில் ஹமாஸ் மற்றும் பிரிவுகள் மூலம் இனி காஸாவின் அண்டை நாடுகளுக்கோ அல்லது காஸா நகர மக்களுக்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படாது என்பதையும் உறுதிப்படுத்த பிராந்திய பங்காளர்களால் உத்தரவாதம் வழங்கப்படும்.
- காசாவில் உடனடியாக அமைதி நிலைக்க, ஒரு தற்காலிக சர்வதேச ஸ்திரப்படுத்தல் படை (ISF) உருவாக்கப்படும். இது, அமெரிக்கா அரபு மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து செயல்படும். இந்த ISF படையானது காசாவில் ஆய்வு செய்யப்பட்ட பாலஸ்தீனிய காவல்துறையினருக்கு பயிற்சி அளித்து ஆதரவளிக்கும். இந்தத் துறையில் விரிவான அனுபவம் கொண்ட ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்படும். இந்தப் படைதான் புதிய காஸா-வின் நீண்ட கால உள்நாட்டுப் பாதுகாப்புத் தீர்வாக இருக்கும். ISF படையானது, புதிதாகப் பயிற்சி பெற்ற பாலஸ்தீனிய போலீஸ் படைகளுடன் இணைந்து, காஸாவின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கவும், இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் இணைந்து செயல்படும். காசாவிற்குள் புதிதாக ஆயுதங்கள் நுழைவதைத் தடுப்பது மற்றும் காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் புத்துயிர் அளிப்பதற்கும் நிவாரணப் பொருட்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் காஸாவிற்குள் செல்வதை எளிதாக்குவதும் மிகவும் முக்கியம்.
- இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது இணைத்துக் கொள்ளவோ செய்யாது. ISF கட்டுப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை நிறுவும்போது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) பின்வாங்கும். இது IDF, ISF, உத்தரவாதமளிப்பவர்கள் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்படும். இதன் நோக்கம், இஸ்ரேல், எகிப்து அல்லது அதன் குடிமக்களுக்கு இனி அச்சுறுத்தலாக இல்லாத ஒரு பாதுகாப்பான காசா ஆகும். தற்போது IDF ஆக்கிரமித்துள்ள காஸாவின் பகுதிகளை இடைக்கால அதிகாரசபையின் ஒப்பந்தத்தின்படி, காஸாவின் ISF இடம் படிப்படியாக ஒப்படைக்கும். இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் இஸ்ரேலின் படைகள் காசாவிலிருந்து முழுமையாக விலக்கப்படும்.
- மேற்கூறப்பட்டவைகளை ஹமாஸ் ஒப்புக்கொள்ள தாமதப்படுத்தினால் அல்லது நிராகரித்தால், பயங்கரவாதம் இல்லாத பகுதிகளில் உதவிப்பணிகள் தொடரும்.
- சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வு மதிப்புகளின் அடிப்படையில் அனைத்து சமயங்களுக்கு இடையேயான உரையாடல் செயல்முறைத் திட்டம் நிறுவப்படும். அமைதியால் பெறக்கூடிய நன்மைகளை வலியுறுத்துவதன் மூலம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனப்பான்மைகளையும் பகையுணர்வையும் மாற்ற முயற்சி எடுக்கப்படும்.
- மேற்கூறிய 20 அம்சத் திட்டம் தொடர்பான சீர் திருத்தத் திட்டங்களை சரியாகப் பின்பற்றினால், பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணயம் மற்றும் வலுவான தேசத்திற்கான நம்பகமான பாதையை நோக்கி நகரும் என்பதை அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.
- இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதியான மற்றும் வளமான சகவாழ்வுக்கான உடன்பாடு காணும் வழிகளை அமெரிக்கா நிறுவும். (- இந்நேரம்.காம்)