எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?

எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன? (Photo courtesy: Times of Israel) எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?
Share this News:

காஸா (07 அக் 2025):  கடந்த அக்டோபர் 7, 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் இஸ்ரேலின்மீது அதிரடியாக பதிலடித் தாக்குதல் நடத்தியதில் 1,400 இஸ்ரேலியர் கொல்லப்பட்டதுடன், 251 பணயக்கைதிகளை பிடித்துச் சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதுவரை ஆங்காங்கே இருபது, முப்பது என காஸா நகர மக்களை கொன்று வந்த இஸ்ரேல், அக்டோபர் 7, 2023 நிகழ்வுக்குப் பிறகு காஸாவின் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தி முழுமையான இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. (அக்.7  நிகழ்வுக்குப் பிறகுதான் இஸ்ரேல் தாக்குதலைத் துவங்கியது என வரலாற்றுத் திரிபு செய்வோர், அதே வருடம் ஜனவரி 1, 2023 துவங்கி அக்டோபர் 6 வரை இஸ்ரேல் கொன்று குவித்த பாலஸ்தீனிய உயிர்களின் எண்ணிக்கை 208 பேர் என்பதை உணர வேண்டும்.)

ஐக்கிய நாடுகள் அவை மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளும் காஸாவின் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அவற்றைச் செவிமடுக்கத் தயாராக இல்லாமல் இருந்த இஸ்ரேல், அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து முதலில் கத்தாரிலும், பின்பு எகிப்திலும் ஹமாஸுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுள்ளது.

அக்டோபர் 7, 2023 பிந்தைய இஸ்ரேலின் இன அழிப்பின் விளைவுகள்

  • சுமார் 67 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • இரண்டரை இலட்சத்துக்கும் மேலான பாலஸ்தீனியர் உடல் ஊனமுற்றுள்ளனர்.
  • 365 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள காஸாவின் மொத்த மக்கள் தொகையான 23 இலட்சம் மக்களில் சுமார் 90% சதவீதம் பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு விரட்டப்பட்டுள்ளனர்.
  • காஸாவின் சுமார் 70% முதல் 90% வரையிலான கட்டிடங்கள் முழுமையாகத் தகர்க்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன.
  • காஸாவின் 36 மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதலே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ளவையும் பகுதி அளவிலேயே செயல்படுகின்றன.
  • 2024ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே காஸாவின் கல்வி நிலையங்களின் கட்டிடங்கள் சுமார் 87% அளவுக்கு தகர்க்கப்பட்டுவிட்டன.
  • காஸா நகரில் பஞ்சம் நிலவுகிறது. பசியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக அதிகரித்தவண்ணம் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 185 பேர் மரணமடைந்ததாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவிக்கிறது.
  • பாலஸ்தீனின் பிரதமராகவும் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராகவும் இருந்த இஸ்மாயில் ஹனியா, அவருக்குப் பின் தலைவராக இருந்த யஹ்யா சின்வார், ஹமாஸின் இராணுவ கமாண்டர் முஹம்மது தைஃப், இணை கமாண்டர் மர்வான் ஈசா, சாலிஹ் அல் அரூரி உள்ளிட்ட ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் பலரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டு விட்டனர்.
  • தற்போது டிரம்ப் அறிவித்துள்ள 20 அம்சத் திட்டத்தின்படி ஹமாஸ் தம்முடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைவார்கள் என்றும் அப்படிச் சரண் அடைவோருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை ஹமாஸ் அமைப்பும் ஏற்றுக் கொண்டுவிட்டது.

இந்நிலையில் அக்டோபர் 7, 2023 தாக்குதலால் ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

எகிப்தில் தோன்றிய “இக்வானுல் முஸ்லிமீன்” என்ற அமைப்பின் கருத்துகளை உள்வாங்கித் தோன்றிய ஹமாஸ் இயக்கத்தை 1987ஆம் ஆண்டு தொடங்கிய ஷேக் யாஸீன் அதற்கு முன்பு “முஜம்மா அல் இஸ்லாமி” என்ற அறக்கட்டளையை நிறுவினார். இஸ்ரேலிய அரசு, 1979-ஆம் அதை அறக்கட்டளையாக ஏற்று பதிவு செய்து, காஸா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி அளித்துள்ளது.

பாலஸ்தீன விடுதலை அமைப்பை (PLO) பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக, துவங்கப்பட்ட காலங்களில் ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் மறைமுகமாக நிதி உதவி செய்தது என்று 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

1993-ஆம் ஆண்டு ஓஸ்லோவில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்துக்குப் பின் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்கித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் 1996-ஆம் நடைபெற்ற முதல் தேர்தலை ஹமாஸ் புறக்கணித்தது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு அதன் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா என்பவர் பிரதமராக ஆட்சியமைத்தார்.

ஹமாஸ் அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை இஸ்ரேல் கொடுத்து வந்தது. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ்-இன் கட்சியினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் கடும் சண்டை ஏற்பட்டு, இறுதியில் காஸா பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் இயக்கதினரிடமும் மேற்குக்கரை பகுதியின் அதிகாரம், அப்பாஸ்-இன் பதஹ் கட்சியினரிடமும் பகிர்ந்து கொள்ளப் பட்டது.

காஸாவின் அரசு அதிகாரம் ஹமாஸ் இயக்கத்தின் கையில் வந்து சேர்ந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், காஸா பகுதிக்கு மின் இணைப்பினைத் துண்டிப்பது, பெட்ரோல் வழங்குவதை தடுப்பது, எல்லைகளை அடைப்பது என உலகின் மிகப் பெரும் சிறைச்சாலையாக இஸ்ரேல் மாற்றி தொல்லை கொடுத்து வந்தது.

அதற்குப் பிறகு 2008-2009 (Operation Cast Lead), 2012 (Operation Pillar of Defense), 2014 (Operation Protective Edge) மற்றும் 2022 (Operation Breaking Dawn) எனும் பெயர்களில் தொடர்ச்சியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்துள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அனைத்து வாய்ப்புகளும் இழந்துவிட்ட நிலையிலும், இஸ்ரேலின் சிறிய அளவிலான படுகொலைகள் தொடரும் நிலையிலும், கைவிட்ட சர்வதேச சமூகத்தினை இனி சார்ந்து இருக்க இயலாது எனக் கருதி 2023 அக்டோபர் 7ஆம் நாள் தாக்குதலை ஹமாஸ் நடத்தி இருக்க வேண்டும்.

காஸா மீதான முற்றுகையை உடைப்பதுதான் தங்கள் நோக்கம் என அக்டோபர் 7 தாக்குதல் நடத்தப்பட்ட சில நாள்களுக்குப் பின் ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான அலி பராகா என்பவர் கூறி இருந்தார்.

பாலஸ்தீன் – இஸ்ரேல் என்னதான் பிரச்னை?

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன் நிலப்பரப்பில் யூதர்களுக்கு என ஒரு நாடும் அரபியருக்கு என ஒரு நாடும் உருவாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையில் 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பரவியிருந்த யூத அகதிகள், பாலஸ்தீனின் நிலப்பரப்பிற்கு வந்து சேர்ந்தனர். பின் 1948-ஆம் ஆண்டு பாலஸ்தீனைவிட்டு வெளியேறிய பிரிட்டன், 14-05-1948 அன்று இஸ்ரேலை விடுதலை பெற்ற நாடாக அறிவித்தது. அதை உடனே அங்கீகரித்த உலக நாடுகள் பலவும் இன்றுவரை பாலஸ்தீன் என்றொரு நாட்டை அங்கீகரிக்கவில்லை. அன்று முதல், பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கு இடையே சிறிதாகவும் பெரிதாகவும் போர்கள் நடந்து வருகின்றன.

அமைதிப் பேச்சு வார்த்தை

அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில், கத்தாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பில் நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையை பாதியில் முடித்து வைத்தது இஸ்ரேல்.  பேச்சு வார்த்தை நடைபெறும் சூழலில் கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது.  அமைதியைக் குலைத்த இஸ்ரேலின் இச்செயலுக்கு உலகமெங்கும் கடும் கண்டனங்கள் குவிந்தன.  அதனைத் தொடர்ந்து கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பைத் தொடர்ந்து ஸ்பெயின், அயர்லாந்து, அர்மீனியா, மெக்சிகோ, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன் என்றொரு நாட்டை அங்கீகரித்துள்ளன.

ஐநாவின் Veto அதிகாரம் பெற்ற நாடுகளில் பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா அங்கீகாரம் அளித்தால் மட்டுமே அது ஐநாவால் அங்கீகாரம் பெற்ற விடுதலை பெற்ற நாடாக இருக்க முடியும். அமெரிக்கா பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கை இப்போதைக்கு இல்லை.

இந்நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த ட்ரம்பின் 20 அம்சத் திட்டத்தின்  பெரும்பகுதி ஹமாஸ் மற்றும் இஸ்ரேலால் ஒப்புக் கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கை வெளிச்சக் கீற்றுகள் தோன்றத் துவங்கியுள்ளன.

ஆக, 2007ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சுமார் 16 ஆண்டுகள் சர்வதேச சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட காஸா மக்கள் மீது சர்வதேச சமூகத்தின் பார்வையை திருப்ப, சுமார் 70 ஆயிரம் உயிர்களும் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும் அழிக்கப் பட்டுள்ளதாகவே கருத முடிகிறது.

அப்பாவி பொதுமக்களோடு, ஹமாஸும் தம்மைத் தாமே அழித்துக் கொண்டு இதைச் செய்துள்ளது. இன்றைய ஹமாஸுக்கு பதிலாக வேறு ஓர் இயக்கம் தோன்றக்கூடும். ஆனால் பாலஸ்தீன மக்கள் நம்மைப் போன்ற சுதந்திரமான மனிதர்களாக வாழ சர்வதேசச் சமூகம் வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கட்டுரை: அழகப்பன்


Share this News:

2 thoughts on “எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?

  1. 1. ஃபலஸ்தீனத்துக்கு 1948இல் அகதிகளாக வந்த யூதர்களுக்கு, அதிக விலை கொடுத்தார்கள் என்ற காரணத்தால் தன் சொந்த நிலத்தை யூதர்களுக்கு விற்றவர்கள் ஃபலஸ்தீனியர்.

    2. யூதர்கள் வீடுகளைக் கட்டிக்கொள்ளக் கட்டடப் பொருட்களை விற்றவர்கள் ஃபலஸ்தீனியர்.

    3. ஓரளவுக்குப் பெருத்த சேதமில்லாத வாழ் சூழலில், அக்டோபர் 7, 2023இல் அசுர பலம் பெருகிவிட்ட இஸ்ரேலில் புகுந்து அதிரடித் தாக்குதலும் பிணைக் கைதிகளும் பிடித்துக்கொண்டு வந்தது ஹமாஸ்.

    யானை, மண்ணை வாரித் தன் தலையில் கொட்டிக்கொண்டது!

  2. பாலஸ்தீனத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் முந்நாள் யூதர்கள்தாமே?

    சிலுவைப் போர்களுக்குப் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யூதர்கள், முஸ்லிம்களாக மாறிவிட்டனர். அதற்கு முன்னர், இருவரும் அண்ணன் – தம்பிகள், சரிதானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *