தோஹா (04, நவம்பர் 2025): வாகனங்களில் குழந்தைகள் அமர்வது குறித்த சட்டத்தை மீண்டும் நினைவுறுத்தி, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) எச்சரிக்கை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோரின் பொறுப்பு என்பதை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனத்தின் முன் இருக்கையில் உட்கார அனுமதிப்பது, போக்குவரத்து சட்டத்தின் பிரிவு (55) இல் உள்ள கிளாஸ் (3) படி, அப்பட்டமான போக்குவரத்து விதி மீறலாகவும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாகவும் கருதப்படுகிறது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன் இருக்கையில் குழந்தைகள் இருப்பது பதிவானால், வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (இந்நேரம்.காம்)
என்ன பாதிப்பு?
“பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முன் இருக்கையில் உட்கார்ந்தால், போக்குவரத்து விபத்துகளில் பெரியவர்களை விட எட்டு மடங்கு அதிகமாக கடுமையான காயங்களுக்கு ஆளாவர்” என அமைச்சகம் எச்சரித்துள்ளது.
“பெரியவர்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஏர்பேக் (airbag) இன் திறக்கும் அழுத்தமானது, குழந்தைகளின் சிறிய உடல் அளவினால் அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்,” என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
எங்கே அமர வேண்டும்?
” வாகனங்களில் குழந்தைகள் பின்புற இருக்கையில் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். மேலும், அவர்களின் வயதுக்கும் எடைக்கும் ஏற்ற குழந்தைகள் பாதுகாப்பு இருக்கையில் (child safety seat) கட்டப்பட்டிருக்க வேண்டும். அத்துடன், எந்தச் சூழலிலும் குழந்தையை வாகனத்துக்குள் தனியாக விடக் கூடாது” என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் வாகனப் பதிவு புதுப்பித்தல் நேரத்தில், சீட் பெல்ட்கள் சரியாக வேலை செய்கிறதா எனும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
கத்தாரில் சமீபத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளைக் கவனத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை நினைவுறுத்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. – இந்நேரம்.காம்
