தோஹா, கத்தார் (09 டிசம்பர் 2025): தோஹாவுக்கும் ரியாத்துக்கும் இடையிலான பயண நேரத்தை இரண்டு மணி நேரமாகக் குறைக்கும் அதிவேக மின்சார ரயில் திட்டம், அறிமுகப் படுத்தப்பட்டது.
போக்குவரத்து அமைச்சகம் (MoT) வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே பயணிகளுக்கான அதிவேக மின்சார ரயில் திட்டம் மூலம் இரு நாடுகளும் தொழில், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சியைப் பெறும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
ஏற்கனவே கத்தார் – பஹ்ரைன் இடையேயிலான கடல்வழி போக்குவரத்து துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.
எவ்வளவு தூரம்? எத்தனை வேகம்?
இந்த அதிவேக ரயில் செல்லும் பாதை, 785 கிலோமீட்டர் தூரம் வரை நீண்டு, இரு நாட்டின் தலைநகரங்களான தோஹாவையும் ரியாத்தையும் இணைக்கும்; அல்-ஹொஃபூஃப், தம்மாம் போன்ற பல பகுதிகளை விரிவுபடுத்தி, ஹாமத் சர்வதேச விமான நிலையத்தை “கிங் சல்மான்” சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கிறது.
மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த அதிவேக ரயில், இரு நாடுகளுக்கும் இடையேயான நிலையான போக்குவரத்திற்கான புதிய பயண அனுபவத்தை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், இந்த ரயில் தோஹாவுக்கும் ரியாத்துக்கும் இடையிலான பயண நேரத்தை வெறும் இரண்டு மணி நேரமாகக் குறைக்கும். இந்த துரித சேவை, போக்குவரத்தை எளிதாக்குவதோடு வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு – இரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்.
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வேலை வாய்ப்பு:
ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இந்த ரயிலைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள சுற்றுலா தலங்களை எளிதாக பயணிகள் பார்வையிட முடியும். இத்திட்டத்தின் மூலம் 30,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். (இந்நேரம்.காம்)
இத் திட்டம், இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 115 பில்லியன் ரியால் வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது GCC நாடுகளிடையே இணைப்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாக அமையும்.
சர்வதேச தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் இத்திட்டம், ரயில்வே மற்றும் ஸ்மார்ட் பொறியியல் துறைகளிலுள்ள சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆறு ஆண்டுகளில், அதாவது 2031 இல் நிறைவு பெறும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
இதன்மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அதிகரிப்பட்டு, கார்பன் உமிழ்வு குறைக்கப்படும்.
- இந்நேரம்.காம்
