பயங்கர ஆயுதங்களைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கத்தாரில் கைது!

Share this News:

தோஹா, கத்தார் (09 ஆகஸ்ட் 2025) :  கத்தார் நாட்டிற்குள் AK-47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சின் குற்றப்புலனாய்வு துறை இவர்களைக் கைது செய்துள்ளது.

இவர்கள் கத்தார் நாட்டுக்குள் ஏற்கனவே துப்பாக்கிகளை கடத்தி வந்ததும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கத்தாரில் கைது செய்யப்பட்ட மூவர் வெளிநாட்டினர் மற்றும் இரு நபர்கள் கத்தார் நாட்டு குடிமக்களாவர். (inneram.com)

துப்பாக்கிகளை சிலர் சட்டவிரோதமாக கடத்தி வருவதாக நம்பகமான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்தச் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதனைத் தொடர்ந்து,  தொடர்புடைய அதிகாரிகள் சந்தேகப்படும்படியான நபர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பலவகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

https://x.com/MOI_QatarEn/status/1954190713698078887

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் கத்தார் நாட்டில் கடும் குற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  விசாரணையில் குற்றம் நிரூபிக்கப் பட்டால், இதில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

நாட்டில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாரான நிலையில் உள்ளது எனவும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிபரம் மூலம், உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கத்தார் முதல் மூன்று இடங்களுள் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத் தக்கது. – (இந்நேரம்.காம்)


Share this News: