பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

Share this News:

சென்னை (14 ஜூன் 2021): பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தபப்டும் என்று தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் சங்கிலித் தொடரை உடைக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்தளவிற்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொண்ட மக்கள் அனைவரும் எனது நன்றி. ஊரடங்கை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கை வந்தது.

அரசும், மக்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பது மட்டுமின்றி, மக்களின் எண்ணங்களை தான் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. என்ன தான் அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் முழுமையாக பின்பற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். கொரோனா கட்டுக்குள் மட்டுமே வந்துள்ளது. இன்னும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது. இதற்கேற்ப அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் நடமாடக் கூடாது. ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டை விதித்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு நாமே பாதுகாப்பு. வர்த்தகர்கள் விதிமுறைகளை பின்பற்றி தங்களது வணிகத்தை செய்ய வேண்டும். டீக்கடைகளில் மக்கள் கூட்டம் கூடக்கூடாது. தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். சலூன் கடைகளிலும் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். பல்வேறு விமர்சனங்கள் வரக்கூடிய சூழலிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்று எச்சரிக்கிறேன். காவல்துறை கண்காணிப்பின்றி கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கின்ற மக்களாக தமிழக மக்கள் மாற வேண்டும் என்பது தான் எனது விருப்பம். இதை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

பொது போக்குவரத்து சேவையை விரைவில் இயக்கணும். பள்ளி, கல்லூரிகள் செயல்படணும். இப்படி ஒவ்வொன்றாக செயல்படுத்த மக்கள் துணை அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *