டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விசிட்!

Share this News:

தஞ்சாவூர் (13 நவ 2021): டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.

முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார்; குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.ஆறாவது நாளான நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாம்களை துவக்கி வைத்தார்.

பின், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். வண்டலுார் தாலுகாவில் வசிக்கும் இருளர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த, 33 குடும்பங்களுக்கு, கீழக்கோட்டையூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

முகாமில் தங்கியுள்ளோருக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.ஆய்வுக்கு சென்ற வழியில், கீழக்கோட்டையூரில் உள்ள டீ கடையில் டீ குடித்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனுார், அடையாறு ஆறு துவங்கும் இடம், மண்ணிவாக்கம் பகுதி, அடையாற்று பாலத்தில், கன மழையால் ஏற்பட்டு உள்ள நீர் வரத்தை ஆய்வு செய்தார்.முடிச்சூர், சி.எஸ்.ஐ., செயின்ட் பால்ஸ் பள்ளியில் உள்ள நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை ஆய்வு செய்தார்.

பின்பு தாம்பரம் பஸ் நிலையத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட்டதுடன், துாய்மை பணியாளர்களிடம், தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார். முதல்வருடன் அமைச்சர்கள் அன்பரசன், சுப்பிரமணியன், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.ஆய்வுப்பணி முடித்து வந்த முதல்வர், நேற்று மாலை காரில் புதுச்சேரி புறப்பட்டு சென்றார்.

இன்று காலை 7:30 மணிக்கு, கடலுார் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம்; காலை 9:30க்கு மயிலாடுதுறை மாவட்டம், இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளுக்கு செல்கிறார்.நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பாதிப்புகள் குறித்து, விவசாயிகளிடமும் கேட்டறிகிறார். காலை 11:30க்கு நாகப்பட்டினம் மாவட்டம், கருங்கனி, அருந்தவபுலம்; திருவாரூர் மாவட்டம், ராயநல்லுார், புழுதிக்குடி; மாலை 3:30 மணிக்கு தஞ்சாவூர்மாவட்டம், பெரியக்கோட்டை பகுதிகளை பார்வையிடுகிறார்; இரவு சென்னை திரும்புகிறார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *