கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? – Fact Check Report

கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? - Fact Check Report கரூர் அசம்பாவிதம் சதியா? யார் பொறுப்பு? - Fact Check Report
Share this News:

கரூர் (01 அக் 2025): கடந்த சனிக்கிழமை 27 செப் 2025 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட “ரோட் ஷோ” பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பலியான 41 பேரில் 11 குழந்தைகள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர்.

தவெக தலைவர் நடிகர் விஜயின் கரூர் வாகனப் பரப்புரையில் நடந்த அசம்பாவிதத்துக்கு உண்மையான காரணம் என்ன? நிஜத்தில் அங்கே நடந்ததென்ன? இச்சம்பவம் திட்டமிட்ட சதியா?

விரிவாகப் பார்க்கலாம்.

முதலில், தவெக தரப்பிலிருந்து ஆளும் கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டுகளையும், இதில் ஆளும் கட்சியின் சதி உள்ளதா என்பதையும் பார்த்து விடுவோம்.

1. நாங்கள் கேட்டிருந்த “லைட் ஹவுஸ் ரண்டானா” பகுதியைத் தராமல், மக்கள் நெருக்கடி மிகுந்த வெளியேற இயலாத இப் பகுதியை வேண்டுமென்றே ஒதுக்கினார்கள். – தவெக

இக் குற்றச்சாட்டில் வைக்கப்படும் தகவல் தவறானது. தவெக கேட்டிருந்த “லைட் ஹவுஸ் ரவுண்டானா” பகுதியைவிட ஒதுக்கப்பட்டிருந்த “பேருந்து நிலைய ரவுண்டானா” பகுதி, அதிக மக்கள் நிற்கக்கூடிய பகுதி. 10,000 பேர் தான் கூடுவர் எனக் கூறியே தவெக லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியைக் கேட்டிருந்தது. அந்தப் பகுதியில் பத்தாயிரத்திற்கு மேல் மக்கள் கூடினால் தாங்காது.  அது மட்டுமல்ல, அப்பகுதியில் இருந்து வெளியேறும் பாதைகள் குறைவு. ஆனால், கூட்டத்துக்கு அதிக மக்கள் வர வாய்ப்புண்டு என்பதைக் காவல்துறை கணித்தே பேருந்து நிலைய பகுதியை ஒதுக்கியது.  காரணம், இந்தப் பகுதியில் மக்கள் வெளியேறும் பாதைகள் அதிகம். ஒருவேளை தவெக சமர்ப்பித்திருந்த கணக்குபடி எதிர்பார்த்து, அவர்கள் கேட்டிருந்த லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியையே ஒதுக்கியிருந்தால் கணக்கிடமுடியாத அளவுக்கான பெரும் அசம்பாவிதமாக மாறியிருக்க வாய்ப்புண்டு.

2. காவல்துறை சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. போதிய காவலர்கள் பணி அமர்த்தப்படவில்லை. – தவெக 

இக்குற்றச்சாட்டுப் பொய்யானது என்பதற்கு நடிகர் விஜயின் பேச்சே சான்றாக உள்ளது. கூட்டம் தொடங்கும் போது துவக்க உரையிலேயே நடிகர் விஜய் காவல்துறை சரியான, முறையான பாதுகாப்பு தந்துள்ளதாகவும் அதிக சிரத்தை எடுத்து மக்களை ஒழுங்குபடுத்துவதாகவும் கூறி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தான் தன் பேச்சை ஆரம்பித்தார். 10,000 பேர் வருவதாக கூறிய தவெகவின் கோரிக்கைக்கும் மேலாக 50 நபர்களுக்கு ஒரு காவலர் என்ற கணக்கில் 25,000 பேர் வருகையை எதிர்பார்த்து 500 காவலர்களைக் காவல்துறை பணியமர்த்தியுள்ளது. ஒருவேளை தவெக சொன்னதை நம்பி 10,000 பேரை மட்டும் எதிர்பார்த்து வெறும் 200 காவலர்களை மட்டும் பணியமர்த்தியிருந்தால் இந்தப் பலி எண்ணிக்கை மிகக் கொடூரமானதாக ஆகியிருக்கும்.

3. கூட்டத்தின் இடையே வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். – தவெக

இக் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். எந்த ஒரு அரசியல் கூட்டத்திற்கும் காவல்துறை தரப்பிலிருந்து அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். கூட்டம் ஏற்பாடு செய்பவர்களும் அவர்களின் தரப்பில் ஓரிரு ஆம்புலன்ஸ்கள் தலைவரின் வண்டி பின்னாலேயே தயார் நிலையில் கொண்டு வருவார்கள்.

இக்கூட்டத்தில் விஜய் பேச்சை ஆரம்பிக்கும் போதே நெரிசல் ஏற்பட்டு மக்கள் கீழே விழுந்து பலியாக ஆரம்பித்து விட்டார்கள். விஜய் பேச்சைத் தொடங்கும்போதே, கீழே நின்ற பவுன்சர்கள் நடிகர் விஜயிடம் இதனைக் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. அதற்காகவே உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டது. ஆனால் இந்த விசயம் விஜய் நின்ற வாகனத்தின் பக்கத்திலிருந்த பெரும்பாலான தொண்டர்களுக்குத் தெரியவில்லை. அதனால், தம் தலைவர் பேச்சை ஆரம்பிக்கும் முன்னரே ஆம்புலன்ஸை யாரோ கூட்டத்திற்குள் அனுப்பியுள்ளனர் என்ற தவறான நினைப்பில் ஆம்புலன்ஸைப் போகவிடாமல் தடுத்து தாக்கினர். நடிகர் விஜய்-யும் அப்போது ஆம்புலன்ஸ் போக வழிவிடுங்கள் என்றுக் கூறியதோடு, என்னப்பா ஆம்புலன்ஸில் நம்ம கொடி இருக்கு? என நக்கலாக கேட்டார். (தவெக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் தான் முதன் முதலில் கூட்டத்தினுள் நுழைந்தன என்பதால்,  அவற்றில் தவெக கொடிகள் கட்டப்பட்டிருந்தன.)

தம்மைப் பார்க்க வந்தத் தொண்டர்கள்தான் பலியாகி அந்த ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப் படுகின்றனர் என்பதைக்கூட விஜய் உணரவில்லை. அவர் வாகனத்தின் ஒரு பக்கம் மக்கள் மயக்கமாகி கீழே விழுந்து கிடக்க, அதனைப் பொருட்டே செய்யாமல் விஜயைப் பார்க்கும் ஆவலில் மற்றவர்கள் கீழே விழுந்தவர்கள் மீது ஏறி மிதித்து முண்டியடிக்க, நடிகர் விஜயும் அதனைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் “பேச்சைத் தொடங்கவா?” எனக் கேட்டு பேச ஆரம்பித்து 10 ரூபா பாட்டு பாடினார். அதாவது ஒரு பக்கம் மக்கள் விழுந்து பலியாகிக் கொண்டிருக்க, விஜய் பாட்டு பாடி கட்டுப்பாடற்ற தொண்டர்களை மேலும் வெறியேற்றி கொண்டிருப்பது வீடியோக்களில் பதிவாகியுள்ளது.

4. மின்சாரத்தை அரசு துண்டித்ததால்தான் மக்கள் பதற்றமாகி தள்ளுமுள்ளு உருவானது. நெருக்குதல் ஏற்படுவதற்கு அதுவே காரணம். – தவெக

இதுவும் பொய் என்பதற்கு நடிகர் விஜய் பேசும் போது எடுக்கப்பட்ட “ட்ரோன்” வீடியோக்களில் காணும் மின் விளக்குகள் சாட்சியங்களாக உள்ளன. அதே சமயம், கட்டுப்பாடற்ற தொண்டர்கள் மின் கம்பங்களிலும் மரங்களிலும் ட்ரான்ஸ்ஃபார்மர்களிலும் ஏறுவர் என்பதால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டுமென தவெகவினர் தான் மின்சார துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை மின்சாரத் துறை நிராகரித்துள்ளது. மின்சாரத்தைத் துண்டிக்கவில்லை என மின்சாரத் துறையும் அறிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்பதற்குக் கூட்டத்தின் ஒரு பக்கம் முழுக்க தெருவோர மின் விளக்குகள் எரியும் வீடியோக்களும் சாட்சியங்களாக உள்ளன. அதே சமயம், விஜய்-யின் வாகனத்துக்கு அருகில் ஃபோகஸ் லைட் செட் செய்வதற்காக தவெக தரப்பிலிருந்து ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் ரூமில் தொண்டர்கள் இடித்துக் கொண்டு நுழைந்ததால், ஜெனரேட்டர் மின்சாரத்தை தவெகவினரே துண்டித்துள்ளனர். இந்த ஜெனரேட்டர் ரூமில் மக்கள் விழுந்ததில்தான் முதல் உயிர் பலி தொடங்கியுள்ளது.

5. காவல்துறை தடியடி நடத்தியது தான் கூட்ட நெருசடி ஏற்பட்டு மக்கள் கீழே விழக் காரணம். – தவெக

நெரிசலைக் கட்டுப்படுத்த, காவல்துறை சிறிதாக தடியடி நடத்தியது உண்மைதான். மயங்கி விழுந்த தவெக தொண்டர்களைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸையே விடாமல், ஆம்புலன்ஸ் ட்ரைவரைத் தாக்கியவர்களிலிருந்து ஆம்புலன்ஸை மீட்கவும், கூட்டத்திலிருந்து நடிகர் விஜய்-யின் வாகனத்தை வெளியே செல்லவிடாமல் சூழ்ந்த கட்டுப்பாடற்ற ரசிகக் கூட்டத்திடமிருந்து விஜய் வாகனத்தை வெளியே கொண்டு வரவுமே காவல்துறை சிறிதாக தடியடி நடத்தியது. இந்த தடியடி நிகழ்ந்ததும் அசம்பாவிதம் நிகழ்ந்த பின்னர் தான். விஜய்-யின் வாகனம் கூட்டத்தினுள் சிக்கினால், அவருக்கும் ஆபத்தாக முடியலாம். இதுவன்றி காவல்துறை வேறு என்ன செய்திருந்தால் ஆம்புலன்ஸையும் விஜய் வாகனத்தையும் கூட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்திருக்க முடியும்?

6. ஆம்புலன்ஸ்களும் மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததும் 10 நிமிடத்தில் அமைச்சர் செந்தி பாலாஜி மருத்துவமனைக்கு வந்ததும் உடனடியாக முதலமைச்சருக்குத் தகவல் தெரிய வந்ததும் பார்க்கும்போது இது திட்டமிட்ட சதியாக இருப்பதையே காட்டுகிறது. – தவெக

உளவுத்துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை ஆகியவற்றை இவ்வாறான பெருங் கூட்டம் நடக்கும் சமயங்களில் அரசு எப்படி அலர்ட்டாக வைத்திருக்கும் என்பதைப் பற்றிய சாமானியர்கள் கூட அறிவர்.   தாமதமாகியிருந்தால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகியிருக்கும். பலியான 41 பேரில் 39 பேர் உயிரிழந்து தான் மருத்துவமனைக்குக் கொண்டுவரப் பட்டனர் Dead on arrival (DOA) என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துவிட்டது. இருவர் மட்டுமே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். ஆனால் நூற்றுக்கணக்கானோர் மயக்கமாகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே உரிய வேக சிகிச்சையில் உயிர் பிழைத்துள்ளனர். அரசின் இந்த வேகச் செயலாற்றல் இன்றி தாமதமாகியிருந்தால் என்னவாகியிருக்கும்? அரசைப் பாராட்ட வேண்டிய செயலை அரசுக்கு எதிராக திருப்பிவிடுவதுதான் இக்குற்றச்சாட்டின் நோக்கமாக தெரிகிறது.

7. ஆம்புலன்ஸில் என்னமோ நடந்துள்ளது. மயக்கமாகி தான் இருந்தனர். ஆம்புலன்ஸில் வைத்து கொன்றுவிட்டனர். – தவெக

இந்தக் குற்றச்சாட்டை உரிய விசாரணை மூலம் மட்டுமே தெளிவிக்க முடியும். அதே சமயம், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இப்படியான அசம்பாவிதம் நிச்சயமாக நடக்குமென எதிர்பார்த்து ஆம்புலன்ஸ்களில் கொலையாளிகளை ஏற்கெனவே செட் செய்து வைத்திருக்க வேண்டும். இதற்கான வாய்ப்பு ஒரு சதம் கூட இல்லை. அப்படி ஏதேனும் வழிகளில் கொன்றிருந்தால் நிச்சயமாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும். அவ்வளவு மக்கள் நெருக்கடி இடத்தில் சதியாளர்களை நிறுத்தியிருந்தால், அவர்களே சாணியாகியிருப்பர் என சம்பவ இடத்திலிருந்த தவெக தொண்டர் ஒருவரே சாட்சியம் சொல்லும் ஒரு வீடியோவும் பதிவாகியுள்ளது. யாராவது ஆம்புலன்ஸினுள் கொலை செய்திருந்தால், உடன் சென்ற உறவினர், பொதுமக்களிலிருந்து ஒருவருக்குக் கூடவா தெரிந்திருக்காது என்ற அடுத்த சந்தேகமும் எழும். ஆகவே, இந்த ஆம்புலன்ஸில் கொன்றார்கள் என்பது அடிப்படை ஆதாரமற்ற ஊகம் மட்டும்தான்.

ஆம்புலன்ஸுக்கு எடுத்து செல்லும் முன்னரே ஒரு பெண் உயிரிழந்து விட்டதாக, எடுத்துச் செல்பவரில் ஒருவர் சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.  உயிரிழந்தபின்பு தான் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளனர் என்பதற்கு இத்தகைய வீடியோக்கள் ஆதாரமாக உள்ளன.

8. மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றிருக்க இவர்கள் அவசர அவசரமாக ஒரே இரவில் அத்தனை பேருக்கும் பிரேதப் பரிசோதனை செய்தது எதையோ மறைக்கச் செய்த சதி. எப்படி அவ்வளவு மருத்துவர்கள் இருந்தனர்? – தவெக

முதலில், மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என்ற எந்தச் சட்டமும் கிடையாது. இரண்டாவது, மனிதாபிமானமற்றவர்கள் மட்டும்தான் பிரேதப் பரிசோதனை ஏன் வேகமாக நடத்துகிறீர்களென கேட்பர். உயிரை இழந்து நிற்கும் ஒரு குடும்பத்தின் பக்கமிருந்து இதனைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே வேதனையின் உச்சத்தில் நிற்கும் உற்றவர்களுக்கு அரசு உடனடியாக செய்யும் ஒரே கருணை, மருத்துவமனை நடவடிக்கைகளை விரைந்து முடித்து உடலை உறவினர்கள் கையில் ஒப்படைப்பது மட்டும்தான். அரசு அதனையே செய்துள்ளது. ஒரு மக்கள் அரசு இப்படித்தான் செயல்பட வேண்டும். அதற்காக மருத்துவக் குழுவை போர்கால சூழல் வேகத்தில் ஒன்று கூட்டியதையெல்லாம் சதியாக காண்பது மனம் பேதலித்தவர்களால் மட்டும் தான் முடியும்.

இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். நடந்த அசம்பாவிதத்தைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்தும் கேடுகெட்ட அரசெனில், உடல்களை உடனே உறவினர்களுக்கு விட்டுக் கொடுக்காமல் பிரேத பரிசோதனையை விசாரணையின் பெயர் கூறி தாமதிக்க வைத்து, அதன் பின் உடல்களைக் கொடுக்கும்போது தம் தொண்டர்களைப் பக்கத்து மாவட்டங்களிலிருந்தெல்லாம் இறக்கி உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று தவெகவுக்கு எதிராக பொதுமக்களின் மனத்தில் கொலைவெறியைத் தூண்டி விட்டுருக்கலாம். அப்படியான கேடுகெட்டச் செயலைச் செய்து, அதன்மூலம் பெரும் இனக்கலவரத்தை மூட்டியவர்களை இந்த நாடு கண்டுள்ளது. ஆகவே, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு செய்தது கருணையின் உச்சகட்டம். இனி யாருக்காவது சந்தேகம் இருந்தால், மறு பிரேத பரிசோதனைக்கு உடல்களைத் தோண்டியெடுத்து முயற்சி செய்யலாம்.

ஆக,

தவெக தரப்பிலிருந்தோ, அவர்களைக் காப்பதற்காகவோ அல்லது குழம்பிய குட்டையில் இன பிண அரசியல் ஆதாயம் தேட முனைபவர்களோ ஆளும் அரசின் சதி கோட்பாடாக முன்வைக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை; ஆதாரம் அற்றவை; பிண அரசியல் ஆதாயம் தேட முயல்பவை. அவ்வளவுதான்.

கரூர் துயரச் சம்பவத்தில், ஆளும் அரசின் சதி இருப்பதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் தெளிவாகின்றன.

ஆனால், இக்கூற்றுக்கு நேர் மாறாக, மக்கள் செத்தாலும் பரவாயில்லை தமக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டுமென தவெக திட்டமிட்டே இந்த அசம்பாவிதத்தை நடத்தியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அது என்னவென பார்ப்போம்!

A. நாமக்கல்லில் காலை 8.45 க்குக் கூட்டம் ஆரம்பிக்குமென அறிவித்து மக்களை முன் தினம் இரவு 2 மணியிலிருந்தே நாமக்கல்லில் கூட வைத்துவிட்டு நடிகர் விஜய் ரொம்ப ஹாயாக காலை 8.50 க்குத் தான் சென்னை விமான நிலையத்துக்கே வந்துள்ளார். இது ஏன்?

B. கரூரில் 3-10 தான் கூட்ட நேரம் என காவல்துறைக்குக் கொடுத்துவிட்டு 11 மணிக்குக் கரூரில் விஜய் பேச இருப்பதாக தம் அதிகாரப் பூர்வ பக்கத்தில் அறிவித்து அங்கேயும் காலை 8 மணியிலிருந்தே மக்களைக் கூட வைத்துள்ளனர். ஆனால், கரூருக்கு விஜய் வந்து சேர்ந்தது இரவு 7 மணி. இது ஏன்?

C. தம்மைப் பார்ப்பதற்காக மட்டும் தான் கூட்டம் கூடுகிறது என்பதும் தம் பேச்சைக் கேட்க அல்ல என்பதும் விஜய்க்கு நன்கு தெரிந்து வைத்துள்ளார்.  வழியில் கூடி நின்ற மக்கள் தம்மைப் பார்த்துவிட்டால் கலைந்து சென்று விடுவார்கள். ஆனால், நாமக்கல்லிருந்து புறப்பட்ட விஜய் வழியோரத்தில் நின்ற மக்கள் தம்மைப் பார்த்து விடாதபடி வாகனத்தின் ஷட்டரை மூடிவிட்டார். இது ஏன்?

D. நாமக்கல்லில் இருந்து கரூர் வர 1 மணி நேரம் தான் ஆகும். ஆனால் சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தார். ஏன்? வழியில் மக்கள் நெருக்கடி, வாகனம் மெதுவாகத்தான் நகர்ந்தது என்றால் அவ்வளவு மெதுவாக நகரும் வாகனத்தின் ஷட்டரை அடைத்து வைத்து கொண்டு உள்ளே என்ன செய்து கொண்டிருந்தார். முன் தின இரவு முதல் மறுநாள் மாலை வரை வெயிலில் தண்ணீர், உணவின்றி பார்க்கக் காத்திருந்த நாமக்கல் மக்கள் அனைவரையும் கரூருக்கு இழுத்து வர வேண்டுமென்பது மட்டும்தானே நோக்கம்?

E. தவெக-வினர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், கரூருக்கு விஜய் வரும் வழியில் அவரைப் பார்க்கும் ஆவலில் விஜய்-யின் வாகனத்தை முந்த முனைந்த இரு சக்கர வாகனங்கள் இரண்டும் விஜய்-யின் வாகனம் மீதி மோதியும் விஜய்-யின் வாகனம் நிறுத்தாமல் வேகமாகச் செல்கிறது.  தனது வாகனம் மோதிய பைக்கில் பயணித்தோர் என்ன ஆனால் எனக்கென்ன என்ற சைக்கோத்தனம் அங்கேயே வெளிப்பட்டுவிட்டது.  நாமக்கல் துவங்கி கரூர் வரை இப்படிப் பின்னாலேயே மக்கள் வருவது தெரிந்தும் அவர்களைக் கண்டிக்காமல் கரூருக்கு இழுத்து வந்ததன் காரணமென்ன?

F. கரூரில் 10,000 பேர் தான் கூடுவர் எனக் கூறி அனுமதி வாங்கி விட்டு, நாமக்கல்லிலிருந்தும் மக்களைப் பின்னாலேயே கரூர் வரை இழுத்து வந்தது தமக்குக் கரூரில் கூடியது மிகப் பெருங்கூட்டம் என்பதைக் காட்டுவதற்காக போட்ட திட்டம்தானே?

G. கரூரில் நுழையும் இடத்தில், அங்கேயே கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது; வாகனம் உள்ளே சென்றால் மக்களுக்கு ரொம்ப சிரமமாகும்; பாதுகாப்பு கொடுப்பது கடினம்; இங்கேயே நின்று பேசுங்கள் என காவல்துறை கோரிக்கை வைத்தும் விடாப்பிடியாக ஒரு நபர் செல்வதற்குக் கூட இடமில்லாதிருந்த இடத்தினுள் வாகனத்தைக் கொண்டு சென்றது ஏன்?

H. கூட்டம் தொடங்கும் போதே விஜய்-யின் வாகனத்தின் வலப்பக்கம் தவெகவினர் வைத்திருந்த ஜெனரேட்டர் தடுப்பை உடைத்து மக்கள் உள்ளே விழுந்ததால் சிலர் இறந்து ஜெனரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டனர். அப்பகுதியில் தான் பெண்களும் குழந்தைகளும் வயோதிகர்களும் அதிகமாக இருந்தனர். ஒரு பக்கத்தில் மின்சாரம் இல்லை, அங்கே மக்கள் கீழே விழுந்து மயக்கமாகி விட்டனர் என பவுன்ஸர்கள் கூறிய பின்னரும் அதனைப் பொருட்படுத்தவே செய்யாமல் விஜய் பேச்சை ஆரம்பித்தது ஏன்?. மக்கள் உயிர் போனால் எனக்கென்ன, என் காரியம் நடக்க வேண்டுமென்ற சைக்கோத்தனம் தானே காரணம்?

I. மின்சாரத்தைத் துண்டிக்க தவெகவினரே மின்சார துறைக்குக் கோரிக்கை கொடுத்துவிட்டு, தவெக பொறுப்பில் இருந்த ஜெனரேட்டர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை, அரசு மின்சாரத்தைத் துண்டித்து மக்களை இருளில் விட்டதாக பொய்ப் பரப்பியது ஏன்?

J. தவெக கோரிக்கை வைத்திருந்தது போல் அரசும் ஒருவேளை மின்சாரத்தைத் துண்டித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?. ஜெனரேட்டர் மின்சாரமும் இல்லை. மொத்தமும் இருளில் மூழ்கி அந்த இடம் மொத்தமாக பேரழிவு நடந்திருக்குமே. இதுதான் தவெகவின் எதிர்பார்ப்பாக இருந்ததா?

K. இது மட்டுமல்லாமல், விஜய் தம் வாகனத்தின் உள்ளேயுள்ள விளக்கையும் அணைத்து வைத்து சைக்கோத்தனமாக ரசிப்பதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. கரூரிலும் பெரும் கூட்டம். வரும் வழியிலும் முகத்தைக் காட்டாமல் ஷட்டரை மூடி அந்தக் கூட்டத்தையும் கரூருக்கு இழுத்து வந்தாகி விட்டது. கரூரில் மின்சாரத்தைத் துண்டிக்க மின் துறைக்கு விண்ணப்பம். தம் வாகனத்திலும் விளக்கை அணைத்து விளையாட்டு. ஒட்டுமொத்தமாக விஜயின் நோக்கமென்ன?. தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு கிள்ளுக்கீரையாக நினைத்திருந்தால் சினிமாத்தன விளையாட்டை விளையாடியிருக்க வேண்டும்? அவ்வளவு பெரும் கூட்டத்தில் இருளில் வாகனத்தினுள் விளக்கை ஆஃப் / ஆன் செய்து தொண்டர்களை எழுச்சியூட்டி, தாமும் அதில் குரூர மகிழ்ச்சி அடைந்ததைத் தானே இது காட்டுகிறது?

L. இக்கூட்டத்துக்கு முன்னர் விக்கிரவாண்டி மாநாட்டில் 400 பேருக்கு மேல் மயங்கி விழுந்துள்ளனர். மதுரை மாநாட்டிலும் மயக்கத்துக்குக் கூடுதலாக 4 பேர் மரணமடைந்துள்ளனர். இவரின் கூட்டம் நடக்கும் இடத்திலெல்லாம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ரசிகர்கள் கூடுவதும் மயக்கம், உயிர்பலி என அசம்பாவிதங்கள் நடந்தும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தொண்டர்படை, இளைஞர் படை என எதுவும் தயாராக்காமல் தம்மைப் பாதுகாக்க மட்டும் ஒன்றிய அரசு பாதுகாப்புக்கும் மேலாக தனி பவுன்ஸர் படையை உருவாக்கி வைத்திருந்தது அசம்பாவிதங்கள் நடக்க வேண்டுமென்ற எண்ணத்திலா?!

M. காவல்துறை கட்டுப்பாடுகளைத் தமக்கு எதிரான செயல்பாடுகளாக நீதிமன்றத்தில் தவெக முறையிட்டும், நீதிமன்றம் தவெக கூட்டம் பற்றி கண்டித்து அறிவுரை கூறியிருந்தும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் தவெக முறையான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்?!

N. அசம்பாவிதம் நடந்து 41 உயிர்கள் பலியான சம்பவத்தில் சிறிதுகூட வருத்தமோ கவலையோ இன்றி உடனேயே தம்மைப் பாதுகாக்க நீதிமன்றத்துக்கு ஓட்டம் ஒரு பக்கம். மறுபக்கம், சி பி ஐ விசாரணை என திசை திருப்பலும் ஒன்றிய பாஜக அரசின் வேக விசாரணை குழுவுமெல்லாம் விஜய்-யைப் பாதுகாப்பதை மட்டுமே லட்சியங்களாக கொண்டுள்ளனவே?!

நடுநிலையுடன் வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் முன் வைத்து மேற்கண்ட சம்பவங்களை இணைத்தால், தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய ஒரு நாசகார சக்தி ரொம்ப தெளிவாக விஜய்க்குப் பின்புல ஆதரவைக் கொடுத்து, எதிர்வரும் தேர்தலுக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்து பெரும் கலவரத்தை உருவாக்கு என அசைன்மெண்ட் கொடுத்து அனுப்பியுள்ளதோ என்ற சந்தேகத்தையே பெரிதாக கிளப்புகிறது.

எதிர்பாரா அசம்பாவிதம் நடந்ததை அரசியலாக்க முயற்சி செய்யாமல், மக்களுக்காக வேகப் பணியாற்றிய அரசையும் அப்படி செய்வதையே சதியாக திசை திருப்பி நாடகமாடுவது விஜய்-யின் பின்னால் பெரும் சதி வலை பின்னப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்ற நிலையை எப்படியேனும் ஏற்படுத்திவிட வேண்டுமென்ற சதி திட்டம் இதன் பின்னணியிலுள்ளது. அரசு வேக நடவடிக்கைகள் அவர்கள் எதிர்பார்ப்பதை நடக்கவிடாமல் செய்கிறது. ஆகவே தான், உயிர்பலிகளைப் பற்றிய கவலை சிறிதுமின்றி விஜய் தரப்பிலான சொதப்பல்களை நன்றாக அறிந்தும், அவர் பின்னால் ஆதரவு கொடுத்து அணி திரள்கிறார்கள்!

ஆகவே,

கரூர் அசம்பாவிதத்தில் சதியுண்டா என்றால். ஆம் உண்டு. அது சதிதான். அந்தச் சதிக்கு முன்திரை நாயகன் விஜய்; பின்னணி நாயகன்?!

பின்னணியில் இயக்குவது யார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வர்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில், தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கத் துடிக்கும் நாச சக்திகளையும் குரூர மனம் கொண்ட விஜய்-யையும் சேர்த்தே தமிழ் நாட்டு மக்கள் குழி தோண்டி புதைப்பது நிச்சயம்!


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *