கொரோனாவால் தமிழகத்தில் குழந்தைகள் பெருமளவில் பாதிப்பு!

Share this News:

சென்னை (15 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,153 ஆண்கள், 2,599 பெண்கள் என மொத்தம் 5,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 156 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 770 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 991 பேரும், கோவையில் 498 பேரும், சேலத்தில் 297 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 16 பேரும், பெரம்பலூரில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 57 லட்சத்து 79 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 354 ஆண்களும், 2 லட்சத்து 2 ஆயிரத்து 128 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 22 ஆயிரத்து 6 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 66 ஆயிரத்து 462 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 34 பேரும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் என 53 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 23 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், செங்கல்பட்டு, கோவை, கடலூர், ஈரோடு, சேலத்தில் தலா 3 பேரும், தஞ்சாவூரில் இருவரும், திருப்பூர், திருவாரூர், ராணிப்பேட்டை, நாமக்கல், நாகப்பட்டினம், மதுரை, கரூர், கன்னியாகுமரி, காஞ்சீபுரத்தில் தலா ஒருவரும் என 17 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 434 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 799 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 940 பேரும், கோவையில் 448 பேரும், கடலூரில் 435 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 912 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 894 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 222 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் 2 தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் 65 அரசு மற்றும் 105 தனியார் நிறுவனம் என மொத்தம் 170 நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *