பி.எம்.கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களின் பங்கு? – ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Share this News:

சென்னை (19 ஆக 2020): கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிஎம் கேர்எஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூறியிருப்பதாவது:

“பிஎம் கேர்ஸ் நிதியின் சட்டப்பூர்வத்தையும், சட்டப்பொறுப்பு குறித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அறிவார்ந்தவர்கள், கல்விவட்டாரங்களில் பிஎம் கேர்ஸ் குறித்த பல்வேறு கேள்விகள் நீண்டகாலத்துக்கு எழுப்பப்படும். ஏனென்றால், பிஎம் கேர்ஸ் நிதியின் உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நிர்வாகச் செயல்பாடுகள் ஆகியவை குறித்து நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை. பிஎம் கேர்ஸ் நிதிக்கு யார் நன்கொடை அளித்துள்ளார்கள்? 2020,மார்ச் மாதத்துக்குள் ரூ.3,076 கோடி நிதி யார் கொடுத்தது?. சீன நிறுவனங்களை அதில் இணைத்துள்ளீர்களா?

ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள்? யாரெல்லாம் நன்கொடை அளித்துள்ளார்கள்? கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிஎம் கேர்எஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பிஎம் கேர்ஸ் நிதியை தொடக்கத்திலிருந்து யாரெல்லாம் பெற்றுள்ளார்கள்? பணம் பெற்றவர்களிடம் இருந்து அந்த பணம் முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான பயன்பாட்டுச் சான்று பெறப்பட்டுள்ளதா? ஆர்டிஐ விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இந்த நிதி இருந்தால், இந்த வலிமையான கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது?,” என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக, பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிஎம்கேர்ஸ் நிதியை தேசியப் பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட மறுத்து நேற்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *