எஸ்.வி.சேகரை தப்பிக்க வைக்க இன்னொரு வழிமுறையை சொன்ன போலீஸ்!

Share this News:

சென்னை (28 ஆக 2020): தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் கைதிலிருந்து தப்பிக்கலாம் என்று போலீஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.

இவ்வாறு பேசிய எஸ்வி சேகர் மீது சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என பயந்து முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது காவல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மன்னிப்பு கோரி எஸ் வி சேகர் மனுத்தாக்கல் செய்தால் கைது செய்யப்பட மாட்டார் காவல்துறை உத்திரவாதம் அளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 2 வரை அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *