எடப்பாடி புலம்பல் – தங்கம் தென்னரசு பதில்!

Share this News:

புதுடெல்லி (02 ஏப் 2022): துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள்கள் பயணமாக டெல்லி கிளம்பிச் சென்றார். ஏப்ரல் 2ஆம் தேதி இன்று திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடி , ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என பலருக்கும் கொடுத்து விழாவுக்கு வரவேற்றுள்ளார்.

முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்து பேசியது போல் டெல்லி பயணத்தையும் விமர்சித்து பேசியுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். டெல்லியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, மரியாதை இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வாய்க்கு வந்ததையெல்லாம் பேட்டி என்று கொடுத்திருக்கிறார்.

முதல்வர், டெல்லிக்கு வருகை தருவதென்பது திமுக அலுவலகத்தை டெல்லியில் திறப்பது மாத்திரம் அல்லாமல், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பிரதமர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களையும் டெல்லியில் சந்தித்து, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை அவர்களிடம் எடுத்து வைக்கும் வாய்ப்பாகவும் இதை உருவாக்கி உள்ளார். தமிழ்நாட்டின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர் பிரதமரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

பிரதமருடன் முதல்வர் அமர்ந்து பேசக்கூடிய அந்த புகைப்படம் எல்லா ஊடகங்களிலும் வெளிவந்திருக்கிறது. முதல்வர் கூறுவதை உன்னிப்பாக பிரதமர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்தாலே விளங்கும். ஆனால், கடந்த காலங்களிலேயே முன்னாள் முதல்வர் எடப்பாடி டெல்லிக்கு வரும்போதெல்லாம் எந்த சூழ்நிலைக்காக வந்தார், தன்னை தற்காத்துக் கொள்வதற்காக டெல்லிக்கு வந்தார் என்பதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியத்தை அவரே உருவாக்கி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்தபோது, நெடுஞ்சாண் கிடையாக பிரதமர் காலில் விழுந்து கிடந்தாரே, முதல்வர் அவரை போல யார் காலிலும் விழுந்தாரா அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு காவடி எடுத்தாரே, அதேபோல காவடி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறோமா, முதல்வர் கம்பீரமாக அமர்ந்து இன்றைக்கு மக்களின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்.

உங்களைபோல அவர், தங்களை காப்பாற்றிக்கொள்ள யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் முதல்வருக்கு இல்லை. நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழக மக்களின் நலனையெல்லாம் அடகுவைப்பதற்காக எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் டெல்லிக்கு வந்தார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. எனவே, பதவி பொறுப்பில் இருக்கும் வரை தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிரான விஷயங்களெல்லாம் வருகிறபோது, வாய்மூடி மவுனிகளாக இருந்துவிட்டு இன்று எடப்பாடி, அறிக்கை விடுவதோ அல்லது பேட்டி என்ற பெயரில் இப்படிப்பட்ட பொய் பிரசாரங்களை மேற்கொள்வதென்பது சரியாக இருக்காது.

ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது, ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக இருந்தாலும் அல்லது உதவித்திட்டம் தமிழக நலனுக்கு எதிராக வந்தபோதும் எல்லாவற்றுக்கும் மேலாக நீட் பிரச்னையில் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமான செயல் நடைபெற்று அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, அந்த மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் வைத்து குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கு கூட முதுகெலும்பு இல்லாத எடப்பாடி அரசு, இன்றைக்கு தமிழக மக்களின் நலனுக்காக, கோரிக்கைகளுக்காக, உரிமைகளுக்காக முதல்வர் டெல்லிக்கு வருவதையும், பிரதமர், அமைச்சர்களையும் சந்தித்து பேசுவது குறித்து அவர் விமர்சனம் செய்வதை பார்த்து சிரிக்கத்தான் வேண்டியது இருக்கிறது. எனவே, முதல்வர் மட்டும் கூட சென்று சந்திக்கவில்லை. எங்களை போன்ற அமைச்சர்களையும் அழைத்து சென்றார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் சந்திக்கிறபோது நானும் உடன் இருக்கும் வாய்ப்பை பெற்றேன். பாதுகாப்பு துறை அமைச்சர் முதல்வரை எவ்வளவு மரியாதையாக, கவுரமாக நடத்தினார் என்பதை அருகில் இருந்து பார்த்தேன். முதல்வர் சொன்ன கோரிக்கைகளை கனிவோடு கேட்டுக்கொண்ட அவர், அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு உறுதி அளித்ததோடு, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளையெல்லாம் அழைத்து ஒவ்வொரு கோரிக்கைகளுக்கும் அவர்களை பதில் சொல்ல சொல்லி, என்னென்ன காரியங்களை நாம் செய்ய இருக்கிறோம் என்பதை சொல்லி முதல்வர் ஆற்றி வரும் பணிகளை வெகுவாக பாராட்டினார்.

அதற்கு மேலாக, பாதுகாப்பு துறை அமைச்சர் வீட்டுக்கு வெளியே வாசல் வரை வந்து முதல்வரை காரில் வழியனுப்பி வைத்தார். முதல்வருக்கு அளித்த மரியாதை, அவர் பெற்றிருக்கும் கவுரவம், பொதுவாழ்க்கையில் அவருக்கு கிடைத்திருக்கும் உயரம், ஊக்கம், தூய்மை அது அவருக்கு பெற்றுத்தந்துள்ள நற்பெயர்தான். இதையெல்லாம் பொறுக்க முடியாமல் எடப்பாடி ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் புலம்புவதை அவர் விட்டு விட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *