மத்திய அரசின் சதித்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- வை.கோ. கடும் கண்டனம்!

Share this News:

சென்னை (20 ஆக 2020): ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை மூலம் இனி அரசுப் பணியாளர் தேர்வினை நடத்தி நியமனங்கள் செய்யும் புதிய திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency – NRA) உருவாக்கப்படும் என்றும், மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வங்கிப் பணி, இரயில்வே பணி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறை பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதுவதால் கால விரயமும், தேர்வுக் கட்டண செலவு அதிகரிப்பதும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க ஒரே தகுதித் தேர்வை நடத்தி, மத்திய அரசின் பணி இடங்களை நிரப்ப தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே தகுதித் தேர்வு என்பது மத்திய அரசுப் பணிகளில் சேர விழைவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றலாம். ஆனால், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ள கருத்து, பா.ஜ.க. அரசின் நோக்கத்தின் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி போன்ற தொழில்நுட்பம் சாராத பணி இடங்களுக்கு தேசிய பணியாளர் தேர்வு முகமை பொதுத் தகுதி தேர்வை நடத்தும். இதில் பெறும் மதிப்பெண்களை தற்போது செயல்பட்டு வரும் ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மூன்று தேர்வாணையங்கள் பயன்படுத்திக்கொள்ளும்.

அடுத்தடுத்து மற்ற தேர்வு அமைப்புகளும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும். இனிவரும் காலங்களில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச தேர்வாணையங்கள், பொதுத்துறை தேர்வாணையங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் மத்திய பணியாளர் தேர்வு முகமையின் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதில்தான் மத்திய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சி நிறைந்த வஞ்சகத் திட்டம் ஒளிந்திருக்கிறது. இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு நடத்தி, தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் நியமனங்கள் செய்வது அடியோடு ஒழித்துக்கட்டப்படும்.

வடநாட்டுத் தேர்வு மையங்களில் எப்படித் தேர்வுகள் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு முறைகேடாக நடத்தப்படும் தேர்வுகள் மூலம் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டின் பணியில் அமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைத்துத்துறைப் பணியிடங்களிலும் வடநாட்டைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்வதற்கும் வழி ஏற்பட்டுவிடும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கும் வகையில் அரசுப் பணியிடங்களில் வடநாட்டு இந்திக்காரர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சதித் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை என்பதை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஏற்கக்கூடாது”

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்..


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *