பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

Share this News:

சென்னை (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் சாரியான ஆதாரங்களை காட்டவில்லை என்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு வழங்கினார். அப்போது, பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கத் தவறியதால் 32 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து அங்கு கட்டிடம் கட்டும் வேலை நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், “நீதிக்கு முன் வலிமையான வாதத்தை வழக்கு தொடுத்தோர் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா?” என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் கருத்து வழக்கம்போல் குழப்புவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *