மவுனம் கலைத்த ராகுல் காந்தி!

Share this News:

புதுடெல்லி (20 டிச 2020): மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சசி தரூர், ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி ஒரு மிகப் பெரிய குடும்பம் என்றும், இதனை பலப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும் என பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், ராகுல் காந்தியே கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியை வழி நடத்தவும் பிரதமர் மோடிக்கு எதிரான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளவும் ராகுல் காந்தி தான் சரியான நபர் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி புதிய தலைவரை தேர்வு செய்வதை தேர்தல் நடைமுறைக்கே விட்டு விடுவதாகவும், கட்சி எந்த பொறுப்பை வழங்கினாலும் ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை பலமுறை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது பற்றி வாய் திறக்காத ராகுல் காந்தி முதன் முறையாக தமது மவுனத்தை, கலைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியே, பொறுப்பேற்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *