கத்தார் (12 பிப்ரவரி 2024): இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த எட்டு இந்திய உளவாளிகளை கத்தார் அரசு விடுவித்தது. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்த விடுதலையை அளித்தமைக்கு இந்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
கத்தாரில் இயங்கி வரும் நிறுவனம் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் (Dahra Global Technologies & Consultancy Services W.L.L). இது, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கத்தார் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஆலோசனை மற்றும் தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் சமீபத்தில் இணைந்த எட்டு இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். (இந்நேரம்.காம்)
கத்தாரின் நீர்மூழ்கிக் கப்பல்களில், நவீன ரேடார் கண்டறிதலைத் தவிர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம், நீர் மூழ்கிக் கப்பல்கள் இருப்பது ரேடாரின் கண்களுக்குத் தெரியாது.
இஸ்ரேலுக்கு உளவு:
இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதாக காட்டிக் கொண்ட இந்திய உளவாளிகள் எட்டு பேர், இஸ்ரேல் நாட்டிற்கு இந்த ரகசியங்களைக் கசிய விட்டனர். இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்த, எட்டு உளவாளிகளையும் கத்தார் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து மேற்கண்ட தனியார் நிறுவனம் மூடப்பட்டது.
இந்நிலையில்தான் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை கத்தார் விடுதலை செய்துள்ளது. இதில் ஏழு பேர் ஏற்கனவே இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.
மரண தண்டனை:
கத்தார் நாடு தயாரிக்கும் போர் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான முக்கியமான தகவல்களை இஸ்ரேலிய உளவுத்துறைக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் காரணமாக, ஆகஸ்ட் 2022 இல் இந்திய உளவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் காவல்துறையின் விசாரணையும், நீதிமன்ற வழக்கும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் நீதிமன்றம், இந்திய உளவாளிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இது, இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. (இந்நேரம்.காம்)
அதனைத் தொடர்ந்து இந்தியா, இவ்வழக்கில் உளவாளிகளின் மீதான மரண தண்டனையை ரத்து செய்யவும், அவர்களின் விடுதலைக்காகவும் கத்தார் நாட்டை வேண்டிக் கொண்டது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் கோரிக்கையைப் பரிசீலித்த கத்தார் அரசு, கடந்த 2023 டிசம்பரில் இந்திய உளவாளிகளின் மரண தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றி ஆணை பிறப்பித்தது.
உளவாளிகளுக்கு விடுதலை:
தொடர்ந்த இந்தியாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சில நிபந்தனைகளின் பேரில் உளவாளிகள் எட்டு பேரின் சிறைத் தண்டனையும் ரத்து செய்தது கத்தார் அரசு.
அவர்களில் ஏழு பேர் ஏற்கனவே இன்று (12-02-2024) இந்தியா திரும்பிவிட்டனர். எட்டாவது நபரின் விடுதலைக்கான நிபந்தனைகள் அல்லது வழக்கின் தற்போதைய நிலை பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
நன்றி தெரிவித்த இந்தியா:
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (MEA) 12-02-2024 திங்களன்று கத்தார் நாட்டின் அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
“வேண்டுகோளை ஏற்று இந்தியர்களை விடுவித்ததற்கும், அவர்களைப் பாதுகாப்பாக நாடு திருப்பி அனுப்பி வைத்தமைக்கும் கத்தார் அரசின் அமீர் எடுத்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்” என இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் புதுதில்லியில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்திய மற்றும் அரபு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருந்தது. அரசியல் ரீதியாக இது பெரிதும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்தது. ராணுவ ரகசியங்கள் தொடர்பான உளவு, துரோகம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியாவின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து விடுதலை செய்ததன்மூலம் கத்தார் நாடு உலகமெங்கும் பாராட்டுக்களைப் பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.
- நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)