பாஜகவின் இரட்டை வேடம் – சிவசேனா தாக்கு!

Share this News:

புதுடெல்லி (08 ஆக 2021): டெல்லியில் ஒன்பது வயது தலித் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.

தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி. கடந்த வாரம் அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் அந்த சுடுகாட்டில் பூசாரியாக வேலை பார்த்து வரும் ராதே ஷியாம் என்ற நபர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், சிறுமியின் தாயிடம், சிறுமி இறந்து கிடப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு தண்ணீர் பிடிக்கக்கூடிய இடத்துக்கு அருகே சிறுமி உயிரிழந்த நிலையில் இருந்தார். மின்சாரம் தாக்கி சிறுமி பலியாகி விட்டதாக கூறிய பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக சிறுமியின் உடலை அங்கேயே தகனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர்.

இதற்கு அந்த சிறுமியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக தகனம் செய்ய கூடாது என்று வலியுறுத்தினார். மேலும் அந்த சிறுமியின் கைகள் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருப்பதை கண்ட அந்தத் தாய்க்கு சிறுமி சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. சிறுமி உதடு நீல வண்ணத்தில் காணப்பட்டது.

இதை பார்த்து அந்த தாய் அழுது புரண்டார். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த நபர்கள் சிறுமியை அங்கேயே உடல் தகனம் செய்து விட்டனர். இதனிடையே தகவல் அறிந்த ஊர் மக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து போராட்டங்கள் நடத்தினர். உயிரிழந்த சிறுமி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆகும். இந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டெல்லி காவல்துறை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களை சந்தித்தனர்.

ஆனால் இவ்விவகாரத்தை அரசியலாக்குகிறது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நிர்பயா என்ற மருத்துவ மாணவி வன்புணர்ந்து கொல்லப்பட்டபோது அதனை எதிர்த்து போராடிய பாஜக, இவ்விவகாரத்தில் காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தியது.

ஆனால் சிறுமி விவகாரத்தில் போராடுபவர்களை வரவேற்காமல் ஏன் முடக்குகிறது? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜகவிற்கு எதிரான கண்டனம் சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *