நடிகர் சூர்யாவால் டாக்டரான மாணவி!

Share this News:

சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், சில சர்ச்சைகளைக்கும் உள்ளாகியுள்ளது.

அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா இருளர் இன மக்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடதக்கது. இதனை திரைப்பட பிரமோஷன் என்றும் கூறுகின்றனர் சிலர், ஆனால் அவரின் சமூக பங்களிப்பு 2006 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது எனலாம்.

கல்வியால் மட்டுமே சமூகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்த நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலமாக இன்றுவரை ஏராளமான மாணவ, மாணவியருக்கு கல்வி சார்ந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதில் ஓர் சாட்சியாக விளங்குகிறார் மேஜர் Dr.கிருஷ்ணவேணி.

கரூர் மாவட்டம், சமுத்துவபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி 7ஆம் வகுப்பு படிக்கும்போதே தாய்- தந்தை இருவரையும் பறிகொடுக்கிறார். ஆதரவற்ற நிலையில் பலரின் உதவியால் தட்டி தடுமாறி 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைகிறார். அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியால் மேல்நிலைப்பள்ளி படிப்பையும் படித்து முடிக்கிறார்.

2011 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில், மருத்துவத்திற்கான அவரின் கட் ஆப் மதிப்பெண் 196.75. நூலிழையில் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழக்கிறார். மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் வேறு படிப்பிற்கு ஆயத்தமான சூழலில்தான் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பற்றி நண்பர்கள் கூற, சென்னைக்கு தனியாக பேருந்து ஏறுகிறார் கிருஷ்ணவேணி. வெளியுலகத்தை பற்றியே தெரியாத அவரின் அந்த முதல் பயணம்தான் தன் வாழ்க்கையையே மாற்றக்கூடிய பயணம் என்பது அப்போது அவருக்கு தெரியாது.

திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆகும் செலவை ஏற்கிறது அகரம் அறக்கட்டளை. தமிழ் வழியில் படித்த அவர் சந்தித்த சிக்கல்களும், ஆதாரவில்லாத அவருக்கு ஏற்பட்ட பாதிப்பும் ஏராளம். கடினமான உழைப்பால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். 2017 ல் ராணுவத்தில் பணி கிடைக்கிறது. பின் படிப்படியாக உயர்ந்து தற்போது மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

ஒரு மனிதன் கல்வியை மட்டும் நம்பி மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு இன்று பெரும் நம்பிக்கையாக திகழ்கிறார் டாக்டர் கிருஷ்ணவேணி. சிறு வயதில் பலர் நான் மருத்துவராகி பிற்காலத்தில் ஏழை எளியோருக்கு உதவுவேன் என வாக்குறுதி கொடுப்பார்கள் ஆனால் கால சூழலில் அவர்களால் பெரிய அளவில் செயல்படுத்த முடியாமல் போகும். ஆனால் மெய்யாகவும் அந்த வார்த்தைகளை தற்போது நிருபித்தும் உள்ளார் கிருஷ்ணவேணி. ஆம், மலைவாழ் கிராமங்களுக்கும் மருத்துவம் கிடைக்காத ஊர்களுக்கும் தனது நண்பர்களுடன் சென்று மருத்துவ விழிப்புணர்வு பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

கல்வி என்ற ஒன்றை கற்றுவிட்டால் காலத்தை வென்றுவிடலாம் என்பதற்கு தற்கால நாயகி கிருஷ்ணவேணியும் ஓர் உதாரணம்.

எழுத்து – மா.நிருபன் சக்கரவர்த்தி

 

நன்றி நியூஸ் 7


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *