கத்தாரைக் கலக்கும் காத்தாடி திருவிழா!

Qatar kite festival to be held from January 25
Share this News:

தோஹா, கத்தார் (03 ஜனவரி 2023): கத்தார் நாட்டில்  ராட்சத பட்டங்களைப் பறக்கவிடும் காத்தாடி திருவிழா (kite festival) வின் இரண்டாவது பதிப்பு, எதிர்வரும் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3, 2024 வரை நடைபெற உள்ளது. இது, பழைய தோஹா துறைமுகத்தில் நடைபெறும். சமீபத்தில் நடைபெற்ற ராட்சத பலூன் திருவிழா மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

கண்கொள்ளாக் காட்சி:

இந்த காத்தாடி திருவிழா-வில் உலகம் முழுவதிலுமிருந்து 60 பங்கேற்பாளர்கள் இதில் இடம் பெறுகின்றனர். இவர்கள் தயாரித்து பறக்க விடும் பட்டங்கள் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த பட்டத் திருவிழா-வைக் காண உலகச் சுற்றுலா பயணிகள் பல்லாயிரக் கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் மூலம் கத்தார் நாட்டின் சுற்றுலாத்துறை வளம் பெறும்.

பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு என பிரத்யேகமாகப் பலவிதமான நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது. (இந்நேரம்.காம்)

இந்த திருவிழாவில் மிகப் பெரிய அளவுகளில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள், குழந்தைகள் விளையாடி மகிழ்ந்திட இலவச விளையாட்டு அரங்கங்கள், பெரியவர்கள் உண்டு மகிழ்ந்திட சர்வதேச உணவு வகைகளுடன் கூடிய உணவு அரங்கங்கள் மற்றும்  இலவச காத்தாடி பயிற்சி பட்டறைகள் நடைபெற உள்ளது.

திருவிழாவிற்கு வருகை தரும் குழந்தைகளுக்கு பயிற்சிகள் தரவும் வல்லுநர்கள் தயாராக உள்ளனர். இந்த பயிற்சியில் குழந்தைகள் தங்கள் சொந்த காத்தாடிகளை வரைவதற்கும், உருவாக்குவதற்கும், வண்ணம் தீட்டுவதற்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வார்கள்.

இலவசமாக பங்கேற்பது எப்படி?

பட்டம் / காத்தாடி திருவிழாவில் பங்கேற்று பயிற்சி பெற விரும்பும் குழந்தைகள், vqikf.com இணையதளம் சென்று இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)


Share this News: