மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை!

Share this News:

சென்னை (30 டிச 2021): மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் அடிப்படையில் சட்ட விரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக சிறப்பு சோதனை இம்மாதம் 6ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இந்த சோதனையில் 2,000 கிலோ கஞ்சா மற்றும் 21 கிலோ ஹெராயின் என மொத்தமாக 23 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக 838 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உரிய அனுமதியின்றி போதை தரும் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மருந்தகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மருத்துவர்களால் பரிந்துரைத்தால் மட்டுமே அளிக்கப்படும் மருந்துகளை போதைக்காக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பு சோதனை நடைபெற்றது.

உரிய மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என மருந்தகங்களுக்கு மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் சோதனை எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் 10581 என்ற உதவி எண்ணிற்கும், 949810581 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் அளிக்குமாறு பொதுமக்களை மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை கேட்டுகொண்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *