கட்சி மாறமாட்டோம் – வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கிய காங்கிரஸ் தலைமை!

Share this News:

பனாஜி (23 ஜன 2022): கோவா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் கட்சி மாறமாட்டோம் என்று சத்தியம் வாங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை.

கோவா சட்டப்பேரவைக்கு கடந்தமுறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. ஆனால் இவர்களில் பலர் அடுத்தடுத்து காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிவிட்டனர். இதனால் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் தரப்பில் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த முறையும் இந்த நிலை ஏற்படக் கூடாது என திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகம், தமது கட்சி சார்பில் களமிறங்கும் 34 வேட்பாளர்களையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று கட்சிமாற மாட்டோம் என கடவுள் சிலை முன் உறுதிமொழி வாங்கியுள்ளது.

மேலும் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் இஸ்லாமிய தர்காவுக்கும் அழைத்து சென்று வேட்பாளர்களிடம் உறுதிமொழி பெறப்பட்டது. இந்நிகழ்வின் போது காங்கிரஸ் சார்பில் கோவா தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரமும் உடன் சென்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அதன் எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு மாற மாட்டார்கள் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் அதற்காகவே வேட்பாளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்கும் முடிவுக்கு வந்ததாகவும் கோவா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கிரிஷ் சோதான்கர் தெரிவித்துள்ளார். கோவாவில் வேறு கட்சிக்கு மாற மாட்டோம் என தமது வேட்பாளர்களிடம் கட்சிகள் சத்தியம் வாங்குவது புதிதல்ல என்பதும் ஏற்கனெவே இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *