நகர்புற உள்ளாட்சித் தேர்தல் – இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது!

Share this News:

சென்னை (17 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

218 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8ஆவது வார்டில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர காஞ்சிபுரம் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தொடர்புடைய வார்டுகளில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக் கூட்டங்கள், ஊர்வலகங்கள் மற்றும் பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக முடித்து விட வேண்டும்.

அதன்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிகிறது. இறுதி கட்ட பிரச்சாரம் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்களும் , தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வெளியாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தங்கி தேர்தல் பணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *