ஆவின் பால் விலை உயர்வு!

Share this News:

சென்னை (04 நவ 2022): கடந்த மாத இறுதியில் தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கும் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு இணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவில், “ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினைத் தொடர்ந்து, 05.11.2022 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32-லிருந்து ரூபாய் 35-ஆகவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41-லிருந்து ரூபாய் 44-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையைப் பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு பாக்கெட்) லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60-ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தைப் பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்குப் பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை), தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு. சில்லறை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ.10 குறைவு.

உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *