ரியாத் (03 நவ 2022): சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் பேரமைப்பான ரியாத் தமிழ்ச்சங்கம் உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
இதுபற்றி சங்கத்தின் செயலாளர் ஜியாவுத்தீன் முஹம்மது விடுத்துள்ள அறிக்கையில்
“ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிறுகதைப் போட்டி இந்த ஆண்டும் நவம்பர் 15, 2022 வரை நடக்கிறது. உலகளாவிய அளவில் நடைபெறும் இப்போட்டியில் ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினர், குடும்பத்தினர் அல்லாத யாரும் கலந்துகொள்ளலாம். இந்திய மதிப்பில் ₹40,000 வரை பரிசுகள் அளிக்கப்பட உள்ளன. தேர்ந்த நடுவர்களை வைத்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. பத்திரிக்கையாளரும் சிறுகதை ஆசிரியருமான பெ.கருணாகரன் வழிகாட்டுதலில் இப்போட்டியின் நெறியாளுநர்களாக கவிஞர்கள் ஷேக் முஹம்மது ஷாஜஹான், பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன், ஜியாவுத்தீன் முஹம்மது ஆகியோர் செயலாற்றுவார்கள். மூன்று பக்கங்களுக்கு மிகாமல் ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் சிறுகதைகளை வார்த்து rtsstorycontest2022@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.