துபாய் (18 ஆகஸ்ட், 2025) : ரூபாய் 220 கோடி மதிப்பிலான (25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள) அரிய இளஞ்சிவப்பு வைரத்தைத் திருடியவர்கள், சில மணி நேரங்களிலேயே துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
“மிகவும் அரிய இளஞ்சிவப்பு வைரத்தை திருடிய மூவரை துபாய் காவல் துறை கைது செய்துள்ளது. திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இந்த வைரத்தின் இன்றைய மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்,” என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளிலேயே வைர வர்த்தகத்தின் முக்கிய மையமாக உள்ளது துபாய் நகரமாகும்.
சமீபத்தில் ஐரோப்பாவில் இருந்து விலையுயர்ந்த வைரத்தை துபாய்க்குக் கொண்டு வந்த வியாபாரியை, பணக்கார வாடிக்கையாளராக தன்னைக் காட்டிக் கொண்ட ஒருவர் ஏமாற்றியுள்ளார். – இந்நேரம்.காம்
சம்பவம் நடந்தது எப்படி?
பெரும் மதிப்பிலான அந்த வைரத்தை வாங்க விரும்புவதாகவும், அதனை நேரில் பார்த்தபின்னரே வாங்க விருப்பம் என்றும் சொல்லி, வைர வியாபாரியைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதனை நம்பிய வைர வியாபாரியும் துபாயில் உள்ள பணக்காரரின் பங்களாவிற்குச் சென்றார்.
அப்போது, வைரத்தை ஆய்வு செய்வது போல் நடித்த திருடர்கள், வியாபாரியை ஏமாற்றி அந்த வைரத்தைத் திருடிச் சென்றனர்.
காவல்துறையில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த வைர வியாபாரி, துபாயின் காவல்துறையில் புகார் செய்தார். துரிதமாக விசாரணையை முடுக்கிய துபாய் காவல்துறை, சம்பவம் நடந்த எட்டு மணி நேரத்திற்குள் வைரத்தைத் திருடிய ஆசிய நாட்டைச் சேர்ந்த மூன்று நபர்களையும் கைது செய்ததோடு, அவர்கள் கைவசம் இருந்த வைரத்தையும் கைப்பற்றினர்.
“சிறப்பு நிபுணர் குழுக்களின் முயற்சிகளும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களும், வைரத்தைத் திருடியவர்களைக் கைது செய்ய துணையாக இருந்தன” என துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
துபாய் காவல்துறையினர் பகிர்ந்துள்ள வீடியோவில், வைரத்தைத் திருடிய கும்பல் கைது செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வேகத்துடன் இணைந்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன் காவல்துறையினரின் விவேகத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர். – இந்நேரம்.காம்
One thought on “ரூ. 220 கோடி மதிப்புள்ள வைரத்தைத் திருடியவர்கள் துபாயில் சிக்கியது எப்படி?”
Comments are closed.