மும்பை (17 டிசம்பர் 2015): மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் ரூ.2.5 கோடி நன்கொடை வசூலித்த பாஜக: தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் அம்பலம்!
மாட்டிறைச்சி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக, அதே மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.2.5 கோடியை நன்கொடையாக பெற்ற தகவல் தற்போது அம்பலமாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கும் பணியில் கடந்த ஆண்டு மும்முரமாக ஈடுபட்டன.
ரூ.20 ஆயிரத்துக்கு மேலான நன்கொடைகள் அளிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த நன்கொடைகளுக்கு நூறு சதவீத வரி விலக்கு கிடைக்கும்.
அதன்படி கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது வசூலான நன்கொடை விவரங்கள் குறித்த நிதி அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் பாஜக தாக்கல் செய்தது.
அதில் மும்பையின் கொலா பாவில் இயங்கி வரும் அல்லானாசன்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனங்களான பிரிகோரி பிகோ அல்லானா, பிரிகேரியோ கான்வெர்வா மற்றும் இந்த் அக்ரோ புட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் பாஜகவுக்கு ரூ. 2.5 கோடி அளிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த அல்லானாசன்ஸ் நிறுவனம் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதில் உலகளவில் பெரிய நிறுவனம் என பெயர் பெற்றது. இது தவிர காய்கறிகள், மசாலா பொருட்கள், தானியங்கள் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலின்போது மாட்டிறைச்சிக்கு எதிராக ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், மறுபுறம் கட்சி சார்பில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இரட்டை வேடம்
இதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கேரளா இல்லத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக நடந்த சோதனை சம்பவம் ஆகியவற்றால் நாடு முழுவதும் சகிப்பின்மை பிரச்சினை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. (நன்றி: தமிழ் இந்து நாளிதழ்)