எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 13 – வீடியோ!

Share this News:



240p Mobile Version For Download Click Here

லெப்போ வரும் மாஸ்டர் பெட்ரூசியோ, நட்சத்திரங்கள் குறித்தப் புத்தகம் தேடி வரும்போது அப்புத்தகம் எழுதிய, தாம் தேடி வரும் இப்னு அரபியை அவர்தான் என்று தெரியாமலேயே சந்திக்கிறான். எதிர்காலத்தைக் கணிப்பதற்காக அப்புத்தகம் படிக்க விரும்புவதாகக் கூறும் பெட்ரூசியோவிடம், அப்புத்தகம் அதற்காக எழுதப்படவில்லை என்றும் அப்புத்தகம் எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருந்த எல்லாவற்றுக்கும் தீர்வுள்ள மற்றொரு புத்தகத்தைத் தாம் பரிந்துரைப்பதாக கூறி திருக்குர்ஆனைக் கொடுக்கிறார் இப்னு அரபி.

அலெப்போவுக்கு ஹலீமா மற்றும் இளவரசர்களுடன் செல்லும் எர்துருலை டைட்டஸும் குர்தோக்லு அனுப்பிய காயி கோத்திர ஆல்ப்களும் பின்தொடர்கின்றனர். தாம் பின்தொடரப்படுவதை அறிந்து எர்துருல், இளவரசர்களையும் ஹலீமா-வையும் துர்குட்டுடன் முன்னே அனுப்பி விட்டு, திரும்பி வந்து பின்தொடரும் குர்தோக்லு ஆட்களை எதிர்கொள்கிறார். எர்துருலைக் கைது செய்து திரும்ப அழைத்து வருவதற்கு அனுப்பப்பட்ட விவரத்தைக் கூறும் ஆல்ப்களிடம், கோத்திரத்துக்குத் திரும்பி செல்லும்படி எர்துருல் கூறுகிறார். ஏற்றுக்கொள்ளாமல் தாக்கும் அவர்களைக் கொன்றுவிடாதபடி பதில் தாக்குதல் நடத்தி அனைவரையும் பிடிக்கிறார். பின்னர், அவர்களைக் கோத்திரத்துக்குத் திரும்பிச் செல்ல எச்சரித்துவிட்டு சென்று விடுகிறார்.
இதனைக் கவனித்து அவ்விடம் வரும் டைட்டஸ், குர்தோக்லு அனுப்பிய அத்தனை ஆல்ப்களையும் கொன்றுவிடுகிறான். அவர்களிடமிருந்து கிடைத்தத் தகவல்படி, எர்துருல் அலெப்போ செல்வதை அறிந்து, டெம்ப்ளர் கோட்டையிலிருந்து கூடுதல் படையினரை வரவழைக்க ஆள் அனுப்புகிறான்.

ஹலீமா-வுடன் சென்றுள்ள எர்துருல் இனிமேல் திரும்பி வரவே மாட்டார், எல்லாம் முடிந்துவிட்டது என எண்ணும் கோக்சேயிடம் தம் கோத்திரம் மற்றும் பெற்றோரைவிட்டு எர்துருல் நிச்சயம் செல்லமாட்டார்; அவர் திரும்பி வருவார் என தைரியம் கொடுக்கிறாள் செல்சான். நதிக்கரையோரம் கிடந்த பேபோராவின் உடலைத் துந்தர் பார்த்த விவரத்தை குண்டோக்டுவிடம் சொல்கிறார் வைல்ட் டெமிர். கோத்திரத்துக்குத் தலைமை பே இல்லை என்ற எண்ணம் கோத்திரத்தினருக்கு வந்துவிட்டதோ எனத் தாம் கவலைப்படுவதாக கூறுகிறார். அக்கவலையினைத் தம்மிடம் விட்டுவிடுமாறும், அதனைத் தாம் பார்த்து கொள்வதாகவும் உறுதியளிக்கிறார் குண்டோக்டு.

தாம் அனுப்பிய ஆல்ப்களைத் தேடி வரும் குர்தோக்லுவும் அவர் ஆதரவாளரும் அவர்கள் கொல்லப்பட்டு கிடப்பதைக் காண்கின்றனர். எர்துருல் அவர்களைக் கொன்றுவிட்டதாக தம் ஆதரவாளர்களிடம் சொல்லி உசுப்பேற்றி விடுகிறார் அவர். ஆனால், டைட்டஸ் ஆட்களின் அம்பு ஒன்று ஒரு ஆல்பைத் துளைத்துள்ளதைக் கண்டுபிடித்து அதனை எடுத்து மறைத்து வைத்துக் கொள்கிறார்.

காயி கோத்திரத்தில் தலைமையக ஆலோசனை கூட்டத்தை குண்டோக்டு கூட்டுகிறார். அதில், பேபோரா கொல்லப்பட்ட செய்தியைக் கூறி எர்துருல் குர்தோக்லுவிடம் பேபோராவைக் குறித்து விசாரித்த பின்னரே கொல்லப்பட்டுள்ளதாகவும் எனவே குர்தோக்லு மீது சந்தேகம் உள்ளது எனவும் கூறுகிறார். தாம் பிடிக்கப்படும் சூழல் எழுவதைப் புரிந்து கொண்ட குர்தோக்லு, சுலைமான் ஷாவின் உத்தரவை மீறி குண்டோக்டுவும் எர்துருலும் இணைந்து திட்டமிட்டு சில வேலைகள் செய்வதாகவும் அலெப்போவுக்கு குண்டோக்டுவையே சுலைமான் ஷா அனுப்பியதாகவும் அதனை குண்டோக்டு மாற்றிவிட்டதாகவும் அதற்காக தாம் அனுப்பிய காயி ஆல்ப்கள் ஐவரை எர்துருல் கொலை செய்து, தம் கோத்திரத்துக்கு எதிராக மாறிவிட்டதாகவும் கூறி திசை திருப்புகிறார். இதனால் குழம்பி நிற்கும் பே-க்களிடம், சுலைமான் ஷா கூட்டாத தலைமையக ஆலோசனை கூட்டத்தில், பங்கெடுக்க முடியாது எனக் கூறி கூட்டத்தைக் கலைத்துவிடுகிறார்.

சுலைமான் ஷா கூறியிருந்தபடியே, அலெப்போவுக்கான பயணத்தைத் தொடங்குவதற்கும் முதலில் செல்லும் அணியுடன் சுலைமான் ஷா-வையும் பாதுகாவலாக வைல்ட் டெமிரையும் அனுப்பி வைக்க குண்டோக்டு முடிவு செய்கிறார். அலெப்போ சென்று கொண்டிருக்கும் எர்துருல், வழியில் ஓய்வுக்காக தங்குகிறார். சுற்றிலும் எந்த அபாயமும் இல்லை எனக் கருதி நிம்மதியாக அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தூரத்திலிருந்து கவனித்து, அவர்களைத் தாக்குவதற்குத் தயாராகிறான் டைட்டஸ்.

காயி கூடாரத்தில் குர்தோக்லுவின் சதியை மீறி, அவர்கள் அலெப்போவுக்குப் பயணத்தைத் தொடங்குவரா?, எர்துருலும் இளவரசர்களும் பாதுகாப்பாக அலெப்போ சென்று சேர்வார்களா என்ற எதிர்பார்ப்புடன் இப்பகுதி நிறைவடைகிறது.

தொடரும்…


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *