நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு ஜன 22 ல் தூக்கு!

Share this News:

புதுடெல்லி (07 ஜன 2020): நிர்பயா வன்புணர்வு கொலைக் குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் சென்றார். அப்போது, வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூருக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 13 நாட்கள் கழித்து (டிசம்பர் 29) அவர் மரணம் அடைந்தார்.

இந்த கொடிய சம்பவம், நாட்டையே உலுக்கியது. இதில் குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரை கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திகார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

‘நிர்பயா’ வழக்கை விரைவு கோர்ட்டு துரிதமாக விசாரித்தது. இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார்.

முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு 2014-ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட்டு 2017-ம் ஆண்டும் உறுதி செய்தன. அதன்பின்னர் 4 பேரின் சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்தது.

இதனையடுத்து டெல்லி திகார் சிறையில் உள்ள 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *