மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

Share this News:

புதுடெல்லி (28 டிச 2021): இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது.

இதேபோன்று உள்நாட்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்து வருகிறது. இந்த இரு தடுப்பூசிகளையும் இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது.

பின்னர் ரஷியாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியும், தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிக்கான பயனாளிகள் பட்டியலில் சுகாதார பணியாளர்கள் முதலிடத்தை பிடித்தனர். 2-ம் இடத்தை பிடித்திருந்த முன்களப்பணியாளர்கள் பிப்ரவரி 2-ந்தேதி முதல் தடுப்பூசி போட்டனர்.

மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த சூழலில் மே 1-ந்தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்துடன் ஜூன் 21-ந்தேதி முதல் வெகுஜன இயக்கமாக இது மாற்றப்பட்டது.

அதன்பின் தடுப்பூசி பணி வேகமடைய தொடங்கியது. கடந்த அக்டோபர் 21-ந்தேதி 100 கோடி தடுப்பூசிகள் என்ற இமாலய இலக்கை இந்தியா எட்டியது. தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், 3-வது அலை உருவாகும் என்ற அச்சம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணி தொடங்கும் என்றும் முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ‘கோவின்’ இணையதளத்தில் சிறுவர்கள் பெயர் பதிவு செய்யும் பணி ஜனவரி 1-ந் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், “ மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ),கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. கோர்பிவேக்ஸ் தடுப்பூசி என்பது ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-E நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட RBD புரத துணை அலகு தடுப்பூசி ஆகும். தற்போது இந்தியாவில் உருவாக்கப்பட்ட 3-வது தடுப்பூசி இதுவாகும்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *