ராஜஸ்தான் கலவரத்தை தொடர்ந்து முஸ்லீம் முதியவர் படுகொலை!

Share this News:

அஜ்மீர் (10 ஏப் 2022): ராஜஸ்தான் கலவரத்தின் அடுத்த நாள் 55 வயது முஸ்லீம் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 3 அன்று, வன்முறையாக மாறிய பைக் பேரணியைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான 40 கடைகள் தாக்கப்பட்டன. கலவரத்தின் அடுத்த நாள் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவாரில் 55 வயது சலீம் என்ற முஸ்லீம் முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார்,

சம்பவ இடத்தில் இருந்த, சலீமின் பக்கத்து வீட்டுக்காரர் ஷாபாஸ் கூறுகையில், கொலை நடந்த அன்று, சலீம் தனது மகனுடன் மார்க்கெட்டிற்குச் சென்று, கடையின் முன்பு பைக்கை நிறுத்தியபோது, ​​திடீரென, சூரஜ் மரோத்தியா என்பவருக்குச் சொந்தமான வேன், சலீமின் பைக் மீது மோதியது. மேலும் சலீமை சூரஜ் கடுமையாக திட்டியுள்ளார். .

“முல்லாக்கள் (முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அவதூறு) ஏன் காய்கறி சந்தையில் இருக்கிறார்கள்?. நாங்கள் சிறுநீர் கழித்தால் எல்லா முல்லாக்களும் அழிந்துவிடுவார்கள். முல்லாக்கள் சந்தையில் நுழைவதை நாங்கள் நிறுத்துவோம்” என்று சூரஜின் மிரட்டியதாக ஷாபாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “சூரஜ் மரோத்தியா, ஷங்கர் பதி, தர்மா பதி, ஜெய் என்கிற டோனி பதி, சுனில் பாடி, ஷங்கர் பன்வார், ராகேஷ் ஜிஆர்டி, ஆகியோர் அங்கு வந்து இரும்புக் குழாய்கள் மற்றும் தடிகளால் சலீமைத் தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த சலீம், மயங்கி விழுந்தார். அவர் அம்ரித் கவுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.” என்றார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, பீவார் நகரக் காவல் துறையினர் சூரஜ் மரோத்தியா, ஷங்கர் பதி, தர்மா பதி, ஜெய் பதி, சுனில் என அடையாளம் காணப்பட்ட ஏழு குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இருப்பினும், வகுப்புவாத வன்முறை குறித்து எந்த அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று நிலைய தலைமை அதிகாரி சஞ்சய் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சில காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. மாநிலத்தின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முதல்வர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *