ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் வியாழனன்று, மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் நீதிபதி காஜி ஜெய்புன்னேசா மொகியுதீன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இவ்வழக்கின் இறுதி உத்தரவு வரை மாணவர்களுக்கு எந்த மதச் சின்னங்களையும் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

இதனை அடுத்து கர்நாடக நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது “இந்த விஷயங்களை பெரிய அளவில் பரப்ப வேண்டாம், நாங்கள் தலையிட சரியான நேரம் எது என்று பார்ப்போம்” என்று இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் கூறியது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அவசர விசாரணை கோரிய மனுக்களுக்கு பதிலளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாநிலத்திலும் விசாரணையிலும் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இதை தேசிய அளவில் கொண்டு வருவது சரியானதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நேரம் வரும்போது கேட்போம்” என்றது.

மேலும், “அனைவருக்கும் அரசியலமைப்பு உரிமைகளை நாங்கள் பாதுகாக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.

மாணவர்களின் தேர்வுகள் வரவுள்ளன என்று மனுதாரர் தரப்பில் கூறியபோது, ​​தலைமை நீதிபதி, “நாங்கள் பின்தொடர்கிறோம். எது பொருத்தமான நேரம் என்று பார்ப்போம்” என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *