ஜித்தா (04 ஜன 2023): சவூதி அரேபியாவில் பெய்து வரும் கனமழைக்கு மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை குன்ஃபுடாக்கின் வடக்கே அல்முதைலிஃப் என்ற இடத்தில் உள்ள முகபாப் கிராமத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உறவினர்களான 5 குழந்தைகள் நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இரண்டு பேர் உயிர் தப்பினர். குழந்தைகளுக்கு 9 முதல் 12 வயதுவரை இருக்கும்.
உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சவூதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையைத் தொடர்ந்து, ரியாத், அல் கர்ஜ் மற்றும் ஷக் ரா ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
வகுப்புகள் ஆன்லைனில் நடக்கும். ரியாத்தில் இன்று மதியம் வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நீடிப்பதால் ஜித்தா மற்றும் மக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஜாமூம், அல்காமில், பஹாரா, ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும்.
அல்கசீம், உனைசா, அல்ரஸ், மித்னாப், புகாரியா, அல்காட், சுல்பி, குவையா மற்றும் ஹஃபர் அல்பாடின் ஆகிய பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.