தோஹா (17 மார்ச் 2020): வளைகுடா நாடுகளில் பிரபலமான கத்தார் நாட்டில் அனைத்து மசூதிகளும் இன்று முதல் காலவரையறை இன்றி மூடப்படுகின்றன.
தினசரி முஸ்லிம்கள் தொழும் ஐவேளை தொழுகைகள் மட்டுமன்றி, வெள்ளிக் கிழமைக்கான சிறப்புத் தொழுகையும் நிறுத்தப்பட்டது. இதனை அரசு தரப்பில் AWQAF சற்றுமுன் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தார் நாடு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக சங்கமிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் கத்தார் அரசு தடை செய்து வருகிறது.
அதன் நீட்சியாக, சமீபத்தில் கத்தார் நாட்டிற்கு வரும் அனைத்து விமானங்களையும் முழுமையாக ரத்து செய்து அறிவித்திருந்தது. இதன்மூலம் வெளிநாட்டுப் பயணிகள் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், பேருந்து, ரயில் சேவை என அனைத்தும் மூடப்பட்டு நகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது. பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. (News source: inneram.com)
இந்நிலையில், நேற்று நாட்டிலுள்ள அனைத்து உணவகங்களையும் (Dine-in) தடை செய்தது.
சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி, அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து நேரத் தொழுகைகளையும் தடை செய்து கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழுகைக்கான பாங்கு (அழைப்பு) ஐவேளையும் மசூதிகளில் ஒலிக்கும். அதனைத் தொடர்ந்து, அவரவர் வீட்டில் இருந்தபடி தொழுது கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பும் வருத்தமுமாக, கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.