ரியாத் (28 டிச 2022): ரியாத்தில் விரிவான மர வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கிரீன் ரியாத்’ என்கிற இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 6,23,000 மரங்கள் நடப்படுகின்றன. தோட்டங்கள், பள்ளிகள், மசூதிகள் மற்றும் 78 வாகன நிறுத்துமிடங்களில் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளன.
சர்வதேச தரத்தில் 120க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இம்மாதம் 29ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை இத்திட்டம் குறித்த விவரங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெறவுள்ளது.
அல் அஜிசியா, அல் நசீம், அல் ஜசீரா, அல் அரைஜா, குர்துபா, அல் கதைர், அல் நகில் ஆகிய பகுதிகளில் மரம் வளர்ப்பை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கிரீன் ரியாத் என்பது சவூதியின் தலைநகரில் மார்ச் 19, 2019 அன்று பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான கிராண்ட் திட்டங்களின் குழுவின் மேற்பார்வையின் கீழ் மன்னர் சல்மானால் தொடங்கப்பட்ட நான்கு திட்டங்களில் ஒன்றாகும்.
ரியாத் உலகின் முதல் 100 நகரங்களில் ஒன்றாக கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பசுமை ரியாத் திட்டமானது கிங்டம் விஷன் 2030 இன் ஒரு பகுதியாகும்.
தலைநகர் முழுவதும் 75 மில்லியன் மரங்கள் நடப்படும். இது காற்றின் தரத்தை மேம்படுத்தவும், வெப்பநிலையை குறைக்கவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.