தம்மாம் (19 ஆக 2021): சவூதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் வெறுக்கத்தக்க அளவில், பதிவிட்டு கைதான கர்நாடகாவை சேர்ந்த ஹரீஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியா தம்மாமில் பணிபுரிந்து வந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹரீஷ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் புனித மக்காவையும், சவூதி அரசாங்கத்தையும் விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அவரை டிசம்பர் 20, 2019 அன்று சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
கைதான ஹரீஷை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் நிரபராதி என்றும், ஹரீஷின் மனைவி இந்திய தூதரகம் மூலம் முயற்சி மேற்கொண்டார். மேலும் ஹரீஷின் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டு இவ்வாறு விரோதமாக பதிவிட்டு சிக்க வைக்கப்பட்டதாகவும் ஹரீஷின் மனைவி இந்தியாவில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விசாரித்த கர்நாடக போலீசார் ஹரீஷின் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சவூதியில் உள்ள மங்களூர் சங்கத் தலைவர் ஷெரீப், நுஸ்ரதுல் மசாகின் என்ற அமைப்பும், இன்னும் பிற தன்னார்வலர்களும் ஹரீஷை விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.
இவற்றிற்கான ஆவணங்கள் இந்திய தூதரகம் மூலம் சவூதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஹரீஷை விடுதலை செய்தது. இதனை அடுத்து விடுதலையான ஹரீஷ் மங்களூர் சங்கத் தலைவர் ஷெரீப் உதவியுடன் இந்தியா வந்தடைந்தார். அவரை அவரது மனைவி மற்றும் மகள் வரவேற்றனர்.
ஹரீஷ் ஏற்கனவே அவரது ஃபேஸ்புக்கில் சங்பரிவார் ஆதரவு பதிவுகளை இட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.