பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை – கத்தார்

பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை - கத்தார்
Share this News:

தோஹா, கத்தார் (15 மார்ச் 2024): கத்தார் நாட்டில் எவராவது பிச்சை எடுப்பதைக் கண்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கத்தார் நாட்டில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். கத்தாரில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படை வாழ்க்கைக்கான தேவைகள் அனைத்தும் உரிய முறையில் கிடைத்திட கத்தார் அரசு வழி செய்துள்ளது.

இருப்பினும், கத்தாருக்கு வருகை தரும் வெளிநாட்டினர் சிலர் பிச்சைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரமலான் மாதத்தில் இது பன்மடங்காக அதிகரித்துள்ளது.

“பிச்சை எடுப்பது இஸ்லாமிய மார்க்கத்திலும் முஸ்லிம் சமூகத்திலும் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட தீய பழக்கம்” என்றும்  “இது மனித நாகரீகமற்ற செயல்” என்றும் சமூக ஊடகங்களில் Ministry of Interior (MOI) அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் எவராவது பிச்சை எடுப்பதைக் கண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்நேரம்.காம்)

பொது மக்களின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி, சட்ட விரோதமாக முழு நேரமாக பிச்சைத் தொழிலில் ஈடுபட்டு பலர் பெரும் பணம் ஈட்டுவதை கத்தார் அரசு கண்காணித்து கைது செய்து வருகிறது.

மேலும், கத்தார் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் ஜகாத் அல்லது நன்கொடைகளை வசூலிப்பதற்காக செயல்பட்டு வருகின்றன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த  தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும் என்பதை அமைச்சகம் மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டி வருகிறது.  இவை அல்லாமல் வேறு நிறுவனங்களோ, தனி நபர்களோ வசூல் செய்தால், அது சட்டப்பட்டி குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிச்சை எடுப்போர் தொடர்பாக புகாரளிக்க தனித் துறை அமைக்கப்பட்டுள்ளது. மெட்ராஷ்2 (Metrash2) ஆப் மூலமாகவோ அல்லது பின்வரும் எண்களை அழைப்பதன் மூலம் இத்துறையைத் தொடர்பு கொள்ளவும்: 2347444 / 33618627.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)


Share this News: