ரியாத்தில் நடந்த ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆண்டுவிழா!

Share this News:

ரியாத் (29 பிப் 2020): திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி தமிழகத்தின் பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலகளாவிய அளவில் முன்னாள் மாணவர் சங்கங்களை நடத்தி வருகின்றனர்.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ரியாத் பிரிவு கடந்த 20 பிப்ரவரி 2020 அன்று ரியாத்தின் நூஃபா அரங்கில் தனது ஆண்டுவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

ஜமாலியன் ரியாத் தலைவர் ஜியாவுதீன் தலைமை தாங்க, முன்னிலையாக துணைத் தலைவர் மாலிக் இப்ராஹிம், செயலாளர் அனீஸ், பொருளாளர் ஷபீர் அஹ்மது, இணைச் செயலாளர் இல்யாஸ் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியை அறங்காவலர் இம்தியாஸ் அஹமது சிறப்பாக ஒருங்கிணைத்து வடிவமைத்திருந்தார்.

தமிழகத்திலிருந்து வந்த தமிழ் ஆளுமைகளும் பேச்சாளர்களுமான ஆளூர் ஷாநவாஸ், சுப வீரபாண்டியன் ஆகியோர் முறையே திரைகடலோடி திரவியம் தேடு, தமிழர் நாகரிகம் ஆகிய தலைப்புகளில் சிந்தை கவரும் சீரிய சொற்பொழிவாற்றினர்.

ஆளூர் ஷாநவாஸ் தனது உரையில் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்திப் பேசினார். அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் போன்ற இந்திய இஸ்ரோ அறிவியலாளர்கள் கூட தாய்மொழியில் கல்வி பயின்றவர்களே என்பதைச் சுட்டிக் காட்டினார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமிழர் நாகரிகம் என்ற தலைப்பில் தமிழர் நாகரிகம் உலகின் முதல் நாகரிகம் என்று சொல்லப்பட முடியாவிட்டாலும் தொன்மையான நாகரிகம் என்பதை சிந்துசமவெளியும் கீழடி ஆய்வுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன என்றார்.

ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவரும், இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன் ‘வார்த்தை விளையாட்டு’ என்னும் சுவாரசியமான தமிழ் விளையாட்டை நடத்தி கூட்டத்தினரை மகிழ்வித்தார். 12 ஜோடிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் முதல் மூன்று அணிகளுக்கு சிறப்பு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாணவமாணவியரின் கண்ணுக்கினிய நடனங்களும், ரியாத் வாழ் பாடகர்கள் ஜாஃபர்சாதிக், ப்ரியாகிரோஷ், ஜியாவுதீன் ஆகியோரின் பாடல்களும் இனிமை சேர்த்தன. பங்குபெற்றோர் அனைவருக்கும் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.

ரியாத் அல்ரயான் மருத்துவமனை வந்திருந்த அனைவருக்கும் மருத்துவ முகாம் நடத்தி இலவச பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார்கள். மதராஸ் கஃபே நிகழ்விடத்திலேயே சுடச்சுட தமிழ்நாட்டின் அருசுவை உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆசியன் மார்க்கெட் நிறுவனத்தினர் குளிர்பானங்களும், சென்னையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அன்றைய நாளில் மலர்ந்த தமிழ்நாட்டின் பூவகைகளில் பலவும் நிகழ்விடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தமிழ் தொழிலாளர்வலர் அமைப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஐந்து நபர்களுக்கு தங்கநாணயம் குலுக்கல் முறையில் வழங்கியது, அதேபோல் ஏர்-இந்தியா நிறுவனம் இந்தியாவிற்கு சென்றுவர பயணச்சீட்டு வழங்கியது. யாரா இந்தியப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்காலர்சிப் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, எப்.டி. எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடங்கியுள்ள உம்ரா சர்வீஸ் பற்றி பிரச்சுரம் வழங்கினார்கள்.

மாதவன், சுபத்ரா மாதவன் ஆகியோர் சுவைபட தொகுத்தளித்த இந்நிகழ்வை ஆயிரக்கணக்கான ரியாத் வாழ் தமிழர்கள் கண்டுகளித்தனர்.

தகவல் : இம்தியாஸ் அஹமது, அறங்காவலர், ஜமால் முஹம்மது முன்னாள் மாணவர்சங்கம் – ரியாத் பிரிவு.


Share this News:

Leave a Reply